மட்டக்களப்பில் மடியேந்தி நின்ற, மஹிந்த ராஜபக்ஷ
-முஹம்மது நியாஸ்-
நேற்றையதினம் இராணுவ வீரர்களின் நினைவு தூபியின் நினைவுப் படிகத்தினை திறந்துவைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடி பள்ளிவாயில்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றை கவலை(?)யுடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு விடுதலைப்புலிகள் நாட்டில் நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளால் பல்சமூகமும் பாதிக்கப்பட்ட சம்பவங்களையும் அதன் வடுக்களையும் ஞாபகப்படுத்தியதாகவே அவருடைய உரை இடம்பெற்றிருந்தது.
உண்மையிலேயே காத்தான்குடி பள்ளிவாயில்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறையோ அல்லது ஏனைய சமூகங்கள் அனுபவித்த இன்னல்களையோ ஞாபகமூட்டி, அங்கலாய்த்து அழுது புலம்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது?
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கு தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக அதியுயர்ந்த பட்ச அரச அதிகாரத்தை வழங்கி அழகு பார்த்தது இந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே. மாத்திரமன்றி பேரினவாத பிக்குகளால் பள்ளிவாயில்கள் தகர்க்கப்பட்ட போது "அது ஒரு சிறிய குழுதான்" என்று ஒத்தடம் கொடுத்து அந்த சிறிய குழுவை தனது சிவப்புச் சால்வைக்குள் வைத்துப் போஷித்ததும் இந்த ராஜபக்ஷ குடும்பமே.
இவ்வாறு முஸ்லிம்களுக்கும் இன்னும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிரான அத்தனை ஆதிக்க சக்திகளையும் அரங்கத்தில் ஆடவிட்டு வேடிக்கை பார்த்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு "காத்தான்குடி பள்ளிவாயில்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்" என்று மட்டக்களப்பில் வந்து நின்று ஒப்பாரிவைப்பதற்கு என்ன அருகதையிருக்கிறது?, அக்கறையிருக்கிறது?
மூன்று தசாப்தகால தனிநாடு(?)காண் யுத்தம் முடிவுக்கு வந்தபோது சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகளவு மகிழ்ச்சியடைந்தார்கள். தலை நகரத்திலும் இன்னும் ஏனைய பகுதிகளிலும் அபிவிருத்திப்பணிகள் முடுக்கி விடப்பட்டபோது ஒரு வர்த்தக சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகமே அதனால் பெருமளவு ஆறுதலடைந்தது.
ஆனால் அந்த ஆறுதலுக்கும் ஆசுவாசத்திற்கும் முழுமையாக இரண்டு வருடங்கள் நிரம்புவதற்கு முன்னரே சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான மீண்டும் ஒரு பயங்கரவாதம் காவியுடைக்குள் கருத்தரித்தது. அப்பயங்கரவாதத்தின் பின்புலத்தில் இருப்பது ராஜபக்ஷ குடும்பம்தான் என்ற அதிர்ச்சியான உண்மையும் காலக்கிரமத்தில் கட்டியம் கூறப்பட்டது.
அத்தோடு சிறுபான்மை சமூகம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இலங்கைவாழ் குடிமக்களே சுதாரித்துக்கொண்டார்கள். அபிவிருத்தியை விடவும், அச்சமற்ற பிரயாணங்களை விடவும் பல்சமூக ஒற்றுமையே பிரதானமானது என்ற யதார்த்தத்தை மக்கள் உணரத்தொடங்கினார்கள்.
ஏற்கனவே விடுதலைப்போராட்டம் என்னும் பெயரால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான் பொருளாதாரத்தையும் விழுங்கி ஏப்பமிட்ட ஒரு கொடூர யுத்தம் மீண்டும் இம்மண்ணில் முளை விடக்கூடாது என்ற நன்னோக்கில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக மக்கள் களத்தில் இறங்கினார்கள்.
அதன் வெளிப்பாடே இன்று பிரதேசத்திற்கு பிரதேசம் அதிகாரப்பிச்சை கேட்டு அலைந்து திரிகின்ற ஒரு அநாதரவான நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தள்ளப்பட்டுள்ளார். அதன் வெளிப்பாடுதான் கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகம் அனுபவித்த போர்க்கால துயரங்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி அதன்மூலம் உணர்வு ரீதியாக-சிறுபான்மை மக்களின் உள்ளங்களில் இடம்பிடிப்பதற்காக ஈனமூச்சுடன் அலைகிறார் மஹிந்த ராஜபக்ஷ.
ஆனால் அது ஒரு வெறும் கனவுதான். என்னதான் அங்கலாய்த்தாலும் நீலிக்கண்ணீர் வடித்தாலும் இனியும் இந்த பசப்பு வார்த்தைகளுக்கு சிறுபான்மை சமூகம் ஏமாந்துவிடப்போவதில்லை என்பதே உறுதியான உண்மையாகும்.
இந்த படிப்பினையாது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் உள்ளதல்ல, இந்நாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இனிவரும் காலங்களில் அரியணையேறக் காத்திருக்கின்ற அனைவருக்குமே பொதுவானது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.
Post a Comment