மஹிந்த ராஜபக்சவை, சிந்திக்கச் சொல்கிறார் மைத்திரி
முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இர ண்டு வருடங்களாகியும் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்கவில்லையென அர சாங்கத்தை விமர்சித்துள்ளார். ஆனால் அவரது அரசாங்கம் முதல் மூன்று வருடங்கள் என்ன செய்தது என்பதையும் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் எழுந்த போது அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியது என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபையின் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர சேவையாளர்களாக நியமனம் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் பாராளுமன்ற மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிக ழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நான் பொது வேட்பாளராக களமிறங்கியிருந்தேன். அந்த சமயத்தில் தற்போது பதவி நியமனம் பெற்றுக்கொண்ட இலங்கை மின்சார சபைக்கு மேன் பவர் முறையின் கீழ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தவர்கள் நீங்கள். அப்போது உங்களிடத்தில் வாக்களித்ததன் பிரகாரம் இன்று உங்களுக்கு நிரந்தர பதவி நியமனங்களை வழங்கியுள் ளோம்.
என்னிடத்தில் மக்கள் உண்ண உணவை பெற்றுத்தாருங்கள் என்றும் வாகனங்களை பெற்றுத்தாருங்கள் என்றும் கோரவில்லை. மாறாக கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் உள்ள ஒரு நாடு, அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களையே கோரியிருந்தனர்.
அதேபோன்று மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு நல்லிணக்கத்துடன் சகல சமூகங்களும் வாழும் ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்தி தாருங்கள் என்றும் நாட்டு மக்கள் கோரினர். அதேபோல் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்ததையும் மறந்துவிடக் கூடாது. அதற்காகவே அடுத்த வருடத்தினை வறுமை ஒழிப்பு வருடமாக நாம் பிரகடனப்படுத்தவுள்ளோம்.
அத்துடன் இன்று மக்கள் கோரியவை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்க மைய கருத்துச் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை சகலரும் பொறுப்பான விதத்தில் பயன்படுத்திக் கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் இந்த அராங்கம் ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் எந்த ஒரு செயற்பாட்டினையும் முழுமையாக முன்னெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிந்தது. ஆனால் அது உண்மைக்கு புறம்பான விடயமாகும்.
அவர்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் முதல் ஆட்சிக்கு வந்த முதல் மூன்று வருடங்களில் செய்தவற்றை பார்க்கிலும் அதிகமாக நாங்கள் செய்துள்ளோம். அவற்றை மக்கள் நேரடியாக உணர்ந்துகொள்ள முடியாதிருக்கலாம் இருப்பினும் அரச பொறிமுறைகளுக்கு அமைவான சிறந்த செயற்பாடுகள் பலவற்றை முன்னெடுத்துள்ளோம்.
நீங்கள் இவற்றினை செய்ய தவறியதன் காரணத்தினால் தான் உங்களது பதவிக்காலம் 2 வருடங்கள் மீதமிருக்கின்ற போதும் இந்நாட்டு மக்கள் உங்களை நிராகரித்தனர். உங்களது ஆட்சியிலிருந்த அமைச்சர் மற்றும் உங்கள் கட்சியின் செயலாளர் என்ற வகையிலும் கடந்த அரசாங்கம் எவ்வாறான நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகம்கொடுக்க நேரிட்டது என்பதை நான் அறியாமல் இல்லை.
அந்த நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க முடியாத காரணத்தினாலேயே இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கம் அமைக்கும் ஒப்பந்தத்திற்கு சென்றீர்கள் என்பதை நீங்கள் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேரை உங்கள் பக்கம் எடுத்துக்கொண்டு ஆட்சி அமைத்தீர்கள். அந்த ஆட்சியும் முதல் மூன்று வருடத்தில் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்ததை மறந்துவிட முடியாது.
அந்த காலப்பகுதியில் உங்கள் அரசாங்கத்தின் மீது எழுந்தது போன்ற விமர்சனங்களே தற்போதும் எழுகின்றன. ஆனால் முதல் வருடத்தில் நாங்கள் அபிவிருத்தி திட் டங்கள் பலவற்றை வரைந்ததால் சேவை களை முன்னெடுக்கவில்லை.
Post a Comment