மாதம்பை முஸ்லிம்களுக்கு பேரிடி - நீதியை பெற்றுத்தரும்படி, முஸ்லிம் அமைச்சர்களிடம் வேண்டுகோள்
மாதம்பையில் புனித பூமிக்குச் சொந்தமானது என அரசாங்க வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் காணிகளை மாதம்பை பிரதேச செயலாளர் நில அளவீடு செய்வதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானத்துக்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டரீதியான காணி உறுதிகள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் காணிகளை நில அளவை செய்து சுவீகரிக்கும் பணியை ஆரம்பிக்க திட்டமிட்டுச் செயற்படுவதாகவும் தங்களது பூர்வீக காணிகளை விட்டு ஒரு போதும் அகலப் போவதில்லை எனவும் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க காணி உறுதிகள் சட்ட ரீதியானவைகளாயின் சுவீகரிக்கப்பட முடியாது என்று தெரிவித்து அக்காணி உறுதிகளை மாதம்பை பிரதேச செயலாளரிடம் ஆவணங்களுடன் கையளிக்குமாறு காணிச் சொந்தக்காரர்களை வேண்டியிருந்தார்.
காணி உறுதிகளை பரிசீலனை செய்து அது தொடர்பான அறிக்கையொன்றினை தனக்குச் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். நேற்று முன்தினம் பிரதேச செயலாளரிடம் 25 காணி உறுதிகளும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட போது அவற்றை பிரதேச செயலாளர் ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட காணி உறுதிகளும், ஆவணங்களும் சட்டரீதியானவை என்றும் அவற்றை ஏற்பதில் பிரயோசனமில்லை எனவும் தெரிவித்து அவர் காணிகளை நில அளவீடு செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக கூறியிருக்கிறார். புனித பூமியின் எல்லைகளை அடையாளப்படுத்துவதற்கு நில அளவீடு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.
காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என்பதற்கு மாதம்பை பிரதேச செயலாளர் எச்.எம்.எஸ்.ரி.ஹேரத் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை.
இதனையடுத்து அமைச்சர் சம்பிக்கவின் உத்தரவுக்கமைய காணி உறுதிகளை பரிசீலனை செய்வதற்கு பிரதேச செயலாளர் மறுப்புத் தெரிவித்ததனால் இது பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் முறைப்பாடு செய்வதற்கு பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தெளிவுபடுத்த பாதிக்கப்பட்டோர் தீர்மானித்திருக்கிறார்கள்.
இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தலையிட்டு நீதி பெற்றுத்தரவேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அனீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடிவெள்ளி - ARA.Fareel
Post a Comment