மின்வெட்டு வருமா - நாளை அறிவிக்கப்படும் - அமைச்சர் தெரிவிப்பு
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நேற்று (15) ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாட்டின் தேசிய மின் உற்பத்தியில் 1/6 பங்கு மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, அனல் மின்நிலையம் செயலிழந்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தேவையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் நாட்களில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை (17) அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின்நிலையம் நேற்றைய தினம் (15) திடீரென செயலிழந்ததோடு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது. ஆயினும் மின்சார சபையின் துரித நடவடிக்கையின் பின்னர் மீண்டும் அது வழமை நிலைக்குத் திரும்பியது.
அத்துடன், நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளிலுள்ள நீரேந்து பிரதேசங்களிலும் நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சீனாவியின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கோளாறு ஏற்படுவது இது முதன் முறை அல்ல என்பதோடு, இறுதியாக கடந்த மார்ச் மாதம் அளவிலும் அது செயலிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment