ஜனாதிபதி மைத்திரி, பற்றி மகிழ்ச்சியடைகிறேன் - கோத்தபாய
காலம் தாழ்த்தியேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சிலர் வெளியிட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
மஹிந்த ராஜபக்சவுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித ரகசிய உடன்படிக்கையும் கிடையாது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைமைகளை புரிந்து கொண்டமையையிட்டு சந்தோசம் அடைகின்றேன்.
இதேவிதமாக ஜனாதிபதி செயற்படுவார் என எதிர்பார்க்கின்றேன்.
பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் செயற்படுவோருக்கு அடிபணிந்து ஜனாதிபதி செயற்பட மாட்டார் என எதிர்பார்க்கின்றேன்.
இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் சில நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அரசியல் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதாக நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தற்போது ஜனாதிபதியும் இந்த விடயத்தை இதே விதமாக தெளிவுபடுத்தியுள்ளார் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறித்து கருத்து வெளியிட்ட போது கோத்தபாய இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment