முஸ்லிம்களின் உரிமைகள், உறுதிப்படுத்தப்பட வேண்டும் - றீட்டாவிடம் ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை
"புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பிரதிநிதித்துவம், மத, கலாசார உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும். அதில் தெளிவற்ற தன்மைகள் இருக்கக்கூடாது. இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பை நாம் வேண்டி நிற்கிறோம்" என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை, சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவுக்கும் சர்வமத தலைவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் முஸ்லிம்களின் நிலைமை மற்றும் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான பங்களிப்பு, சர்வமத தலைவர்கள் மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான முன்னெடுப்புக்கள் தொடர்பில் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயாவிடம் விளக்கமளித்தார். அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது,
பழையவைகளையும் நடந்து முடிந்த சம்பவங்களையும் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. பழைய சம்பவங்களை மறப்போம். மன்னித்துவிடுவோம். நாம் எமது எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம். எமது பாதுகாப்புக்கும் உரிமைகளுக்குமான நல்ல நகர்வுகள் எமக்குத் தேவை. முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் உங்களைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறார்கள்.
அறிக்கைகளைக் கையளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளின் தீர்வுக்காக தாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வமத தலைவர்களின் அமைப்பு இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் நாட்டு மக்களின் சக வாழ்வினை உறுதிப்படுத்துவதற்கும் பொதுப் பிரகடனம் மூலம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
நாட்டின் எந்தப் பாகத்தில் இனங்களுக்கிடையில் சிறியதொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாவட்ட கிளைகள் மூலம் தீர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரச்சினைகள் உருவாகும் போது அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பில் மதத்தலைவர்களுக்கு விழிப்பூட்டப்படவுள்ளது. இதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மதத்தின் கோட்பாடுகளையும் அதன் வரைவிலக்கணத்தையும் அந்தந்த மதத்தினரே முன்வைக்க வேண்டும். மாறாக ஒரு மதத்தின் கோட்பாடுகளையும் வரைவிலக்கணத்தையும் வேற்று மதத்தவர்கள் முன்வைக்கக் கூடாது. இதனாலேயே இனமுறுகல்கள் உருவாகின்றன. இவ்விடயம் மதங்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றிய பிரகடனம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். இந்தப் பிரகடனத்தை அமுல்படுத்தி மனித உரிமைகள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் ஏனைய இனத்தவருடன் நல்லிணக்கத்துடனும் நல்லுறவுடனும் வாழ்கிறார்கள். எங்களுக்குள் புரிந்துணர்வு இருக்கிறது. என்றாலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
நாட்டில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதற்கும் தனியான அமைச்சொன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த அமைச்சு தனது பணிகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெல்லன்வில விமலரத்ன தேரர்
ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயாவுடனான கலந்துரையாடலில் முஸ்லிம் தரப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியுடன் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ, முபாரக், பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் அகார் மொஹமட், தேசிய சூரா சபையின் உபதலைவர் எஸ்.எச்.எம்.பளீல், மௌலவி ஹஸ்புல்லாஹ் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
-விடிவெள்ளி ARA.Fareel-
Post a Comment