குப்பை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!
நாடு பூராகவுமுள்ள மாநகர சபைக்குட்பட்ட எல்லையில் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து சேகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
மேலும், வீதிகளில் குப்பைகளை எறிபவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவுசெய்ய விசேட அழைப்பு இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மற்றும் மாகண சபைகள் அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர் ,
நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்ற பாரிய பிரச்சினைகளில் தரம் பிரிக்கப்படாமல் , சேகரிக்கப்படாமல் இருக்கின்ற குப்பைகளும் உள்ளடங்குகின்றன.
கடந்த 2 மாதக் காலப்பகுதியில் மாத்திரம் மேல் மாகாணத்தில் அதாவது கொழும்பில் மாத்திரம் 6 இலட்சம் பொலித்தீன் பாக்கெட்டுக்கள் சேகரிக்கப்படாமலும் குப்பை தொட்டிகளில் வீசப்படாமலும் வீதிகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் மாநகர சபைகள் குப்பைகளைச் சேகரிக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. குப்பை சேகரிக்கும் வேலைத்திட்டம் தவறாமல் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். எனவே அதில் மாநாகர சபைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு குப்பைகளை கொட்டுபவர்கள் இலகு வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
ஆகவே சேகரிக்கப்படும் குப்பை முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இன்று காலை நடத்திய கலந்துரையாடலில் 09 மாவட்டங்களையும் சேர்ந்த மாநகர ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். அதன் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே அத்தீர்மானத்திற்கிணங்க எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து நாட்டின் சகல மாநகர எல்லைப் பிரதேசங்களிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள் என சகல இடங்களிலும் குப்பைகளை ஒதுக்கும் போது அதனை தரம் பிரித்து ஒதுக்க வேண்டும். அதற்கிணங்க உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக், கண்ணாடிக் குப்பைகள் என வெவ்வேறாக ஒதுக்க வேண்டும்.
உரிய முறையில் தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட குப்பைகளை மாத்திரம் மாகர சபை சேகரிக்கும். குறித்த திட்டம் தற்போதைக்கு சில மாநாக சபைகளால் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் நவம்பர் மாதத்திலிருந்து இத்திட்டம் சகல மாநகர சபைகளாலும் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் இத்திட்டத்தின் நடைமுறைச் சிக்கல்களை அவதானித்து விரைவில் நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதனையும் மீறி தமது குப்பைகளை தரம் பிரிக்காமல் இருப்போரது குப்பைகளை மாநகர சபைகள் ஒரு போதும் சேகரிக்காது.
மேலும் வீதிகளில் குப்பைகளை வீசியெறிபவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது.
வீதிகளில் , பாதைகளில் குப்பைகள் வீசப்பட்டு கிடப்பின் குறித்த வீட்டு உரிமையாளருக்கு எதிராகவே வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு அபிவிருத்திகளை மாற்றத்தை கொண்டு வருவதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.
இதனடிப்படையில் இந்த திட்டத்துக்கு சகல தரப்பினரிடம் இருந்தும் -ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.
மேலும் இந்த விசேட திட்டத்துக்கு 119 , 011-2587124 , 011-259311 என்ற விசேட தொலை பேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே குப்பைகளை வீதிகளில் வீசி எரிபவர்களது தொடர்புகளை உடனடியாக இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புக்கு கொண்டு தெரிவிக்க முடியும்.
Post a Comment