அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு, சிறந்த முன்மாதிரி ஆதில் - சாமர லக்ஷான் குமார
தமிழில் - அபூபத்ஹான்
எனது நண்பர் ஒருவர் ஊடாக கடந்த வாரம் ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணச் செய்தியை அறிந்து மிகுந்த சோகத்தினை உணர்ந்தேன். ஆதிலுக்கு எவ்வித கொடிய நோயும் காணப்படாமை அந்த மரணச் செய்தி அதனை நம்ப முடியாத அளவுக்கு என்னை வருத்தியது. ஆதில்கள் பலர் எம்மிடம் இல்லை. எமது நண்பர் குழாத்தில் இருந்த ஒரே ஆதில் ஆதில் பாக்கிர் மாக்கார் ஆவார். முன்னாள் அமைச்சர் இம்தியாஸின் மகனான அவருக்கும் எமக்குமிடையிலான நட்பின் வரலாறு பத்து வருடங்களுக்கும் மேற்பட்டது. தனது பட்டப்பின் படிப்புக்காக ஆதில் கடந்த செப்டம்பர் மாதம் தான் இங்கிலாந்து சென்றார். எதிர்கால உலகத் தலைவர்களை உருவாக்கும் நோக்குடன் பிரித்தானிய அரசினால் வழங்கப்படும் புகழ் பெற்ற செவினிங்க் புலமைப்பரிசிலை வென்று, மேலதிக கற்கைக்காக ஆதில் இங்கிலாந்து சென்று சில வாரங்களே ஆகியிருந்தன.
உண்மையில் ஆதில் ஓர் அபூர்வமான இளைஞர் ஆவார். அவருடன் உரையாடுவது என்பது எப்போதும் நமது அறிவுக்குப் புதிய ஒன்றை சேர்ப்பதாகவே அமைந்திருந்தது. கலை, இலக்கியம், வரலாறு, விளையாட்டு, அரசியல் என்ற எந்த ஓர் விடயம் தொடர்பாகவும் ஆதிலுக்கு உயர்வான அறிவு காணப்பட்டதோடு, அவற்றை இற்றைப்படுத்திக் கொள்வதில் அவர் எப்போதும் ஈடுபாடு காட்டினார். சமகால பெரும்பாலான அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இரவு கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதற்காக சண்டையிடும் ஓர் கலாச்சாரம் காணப்படும்போது, இம்தியாஸின் பிள்ளைகள் அதற்கு எதிர்மறையானவர்களாக காணப்பட்டனர். இரவு விடுதிளுக்குச் செல்வதற்குப் பதிலாக அந்தக் குடும்பத்தின் பிள்ளைகள் எப்போதும் தமது சந்ததியின் மூத்தவர்கள் போன்று சிறந்த கல்வியைப் பெற்று சமூகத்தைப் பிரகாசிக்கச் செய்ய முயற்சித்தனர்.
இரவு விடுதிகளுக்குப் பதிலாக அவர்கள் விரிவுரை மண்டபங்களில் இருந்தனர். அல்லது நூலகங்களில் இருந்தனர். பெற்றுக் கொண்ட அறிவினைக் கொண்டு சமூகத்துக்கு சேவையாற்றுவது அவர்களது நோக்கமாகக் காணப்பட்டது. நான் தொலைக்காட்சியில் பத்திரிகை வாசிக்கும் நிகழ்ச்சியில் வருகைதரு பகுப்பாய்வாளராகத் தொடர்புபட்ட காலத்திலேயே ஆதிலுடனான எனது தொடர்பு அதிகமாகியது. காலை 6.30 க்கு அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு அப்போது நான் பணியாற்றிய பத்திரிகை நிறுவனத்தி;குச் செல்வதற்கு முன்பாக புலர்ஸ் லேனில் அமைந்துள்ள ஆதிலின் வீட்டுக்கு கட்டாயம் செல்பவனாக இருந்தேன்.
ஆதிலின் தந்தையான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும், தாய் பரீதாவும் எமக்கு மிகவும் அன்பு காட்டினர். நாம் ஒன்றரை மணித்தியாலம் வரை பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக அங்கு உரையாடிக் கொண்டிருப்போம். அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பாக அதிகமாகக் கலந்துரையாடினோம். அந்த விடயங்கள் தொடர்பாக ஆதிலிடம் காணப்பட்ட அறிவு அது தொடர்பான துறைசார் அறிவுடையோரையும் பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு காணப்பட்டது. உண்மையில் அவர் ஓர் அறிவுக் களஞ்சியமாகக் காணப்பட்டார். ஆதிலுடனான எமது உறவு எமது அறிவை மென்மேலும் மேம்படுத்துவதற்கு காரணமாய் அமைந்தது. சமூகம்; என்ற வகையில் இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவரிடம் காணப்பட்ட வாசிப்பு துருப்பிடித்த மூளைகளுக்குத் தகுந்த சிகிச்சையாக காணப்பட்டது. அவை மிகவும் நடைமுறை ரீதியானவையாகக் காணப்பட்டன. பெரும்பாலான இளைஞர்கள் போன்று அவர் பிரச்சினைகளை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நோக்கவில்லை. ஆழமாக ஒன்றை நோக்குவது அவரது வழக்கமாகக் காணப்பட்டது.
பலமான குடும்பப் பின்புலம் காரணமாக ஆதிலிடம் அவ்வாறான பண்புகள் காணப்பட்டன என்று நான் நம்புகிறேன். விளையாட்டு, இலக்கியம் தொடர்பாக அவருக்கு உயர்வான அறிவு காணப்பட்டது. ரகர் விளையாட்டு மூலம் நாட்டைத் தேசிய ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய பலர் அவரது நண்பர்களாகக் காணப்பட்டனர்.
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குடும்பத்தின் பிள்ளைகளில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவராக ஆதில் இருந்தார். உயர்வு தாழ்வு பேதமின்றி ஏனைய பிள்ளைகளும் மக்கள் மத்தியில் கலந்துறவாடினாலும் அதில் ஆதில் மிகவும், வித்தியாசமானவராகக் காணப்பட்டார். அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று எமது சாதாரண மொழியில் தொடர்பாடலை மேற்கொள்ளும் பழக்கம் அவரிடம் காணப்பட்டது. அதன் மூலம் அவரது போலியற்ற உண்மைத் தன்மை வெகுவாக வெளிப்பட்டது. ஆதில் மனதார மிகுந்த நெருக்கத்துடனேயே அவ்வாறு பேசுகிறார் என்ற கருத்து அனைவரிடமும் காணப்பட்டது.
செயற்பாட்டு ரீதியாக அரசியலில் ஈடுபடாவிடினும் தனக்குச் சாதகமற்ற மிகுந்த சிக்கலான நிலைமையிலும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லாமல் அதனைப் பலப்படுத்துவதற்கு இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தொடர்ச்சியாக செயற்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்து நிற்பது தலைமுறை ரீதியான உரிமை என்று அவர் நம்பினார். கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களின் போட்டியிட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இம்தியாஸ் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். வாகனத்துக்கான பெற்றோலுக்குத் தனது பணத்தை செலவழித்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்காக இம்தியாஸ் பணியாற்றும்போது அவருக்கு பாரிய பலத்தை ஆதிலே வழங்கினார். தனது பரீட்சைகளைக் கூட தவறவிட்டு விட்டு ஆதில் தந்தையைத் தனித்து விடாமல் அவருடன் நாடுபூராகவும் சென்றார். அவ்வாறான பெரும்பாலான பயணங்களின்போது வாகனத்தை ஆதிலே செலுத்தினார். அவர் தந்தையுடன் நிழல் போன்று இணைந்திருந்தார். அதன் காரணமாக பாக்கிர் மாக்கார் குடும்பத்தின் அடுத்த அரசியல் பிரதிநிதி ஆதில் தான் என்று அதிகமானவர்கள் அனுமானித்தனர்.
தந்தை தொடர்பாக எல்லையற்ற கௌரவம் காணப்பட்டாலும், தந்தையின் விளக்கு மூலம் பிரகாசிப்பதற்கு ஆதில் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாகத் தன்னைக் கொண்டு தந்தைக்கு ஓர் பெறுமதியை வழங்க அவர் முயற்சித்தார். ஆதில் ஓர் சிறந்த வாசகர் ஆவார். நாம் எழுதுவது, கூறுவது தொடர்பாக அவர் எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவை தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார். அவரிடம் காணப்பட்ட விசேட பண்பு அவர் ஓர் இனவாதியாக இல்லாமல் இருந்தமையாகும். சிங்கள இனவாதத்தை மாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் இனவாதத்தையும் அவர் நிராகரித்தார். பொருளாதார சுபீட்சத்தைப் பெற்றுக் கொண்டு ஆசியாவில் நவீன நாடாக மாற வேண்டுமாயின் நாட்டில் பரந்த தேசிய ஐக்கியமும், இனங்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் உருவாக வேண்டும் என்பது அவரது நோக்காகக் காணப்பட்டது. தேசிய ஐக்கியத்துக்கான பாக்கிர் மாக்கார் நிலையத்தை உருவாக்கி இம்தியாஸ் குடும்பத்தினர் அதற்காகப் பாடுபடும்போது, அதன் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆய்வுப் பத்திரங்களைத் தயாரித்து, செயலமர்வுகளை ஏற்பாடு செய்வதில் பங்குகொண்டு ஆதில் முழு உடம்பாலும் அதற்காகப் பணியாற்றினார் என்பதை இக்கட்டுரையாளர் நன்கு அறிவார்.
மரணிக்கும்போது ஆதிலின் வயது இருபத்தி ஐந்து ஆகும். அந்த அர்த்தத்தில் நோக்கும்போது ஆதிலுக்கு மானிட ஆயுளின் சொற்பமான காலத்தையே அனுபவிக்க முடிந்தது எனலாம். எனினும், அக்காலப்பகுதியினுள் எழுபத்தி ஐந்து அல்லது என்பது வருடங்கள் வாழும் ஒருவரை விடவும் அதிகமான பணியை நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றியுள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் சபையின் சர்வதேசப் பிரிவுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி என்ற வகையில் அவர் கடந்த காலத்தில் நாட்டின் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காக சிறப்பான பணியை ஆற்றினார். சர்வதேச மாநாடுகள் பலவற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர் அந்த அனைத்து மாநாடுகளிலும் நாட்டின் நற்பெயரை பிரகாசிக்கச் செய்தார். இம்தியாஸின் சரளமான பேச்சாற்றல் ஆதிலிடமும் இயல்பாகவே காணப்பட்டது. அவரது குழுத் தொடர்பாடலுக்கு அது சிறந்த கருவியாகக் காணப்பட்டது. ஆதிலின் திடீர் மறைவுடன் சிறந்த அன்பான ஓர் மனிதரை மாத்திரமன்றி சிறந்த பேச்சாற்றல் மிக்க ஒருவரையும் நாடு இழந்து விட்டது.
ஓர் நாள் ஆதிலுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது இந்த நாட்டிற்காக சேவையாற்றும் உயர் திறமை காணப்பட்டாலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத தலைவர்கள் குறித்து நாம் கலந்துரையாடினோம். என். எம்., லலித், காமினி, கதிர்காமர் போன்ற தலைவர்கள் பலர் தொடர்பாக அங்கு உரையாடும்போது ஆதில் கரு ஜயசூரியவின் பெயரையும் நினைவுபடுத்தினார். பாரியதோர் அரசியல் தவறினை இழைத்து ராஜபக்ஷ ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் கருவுக்கு நாட்டை மாற்றியமைக்கும் சிறந்த திறமை காணப்பட்டது என ஆதிலின் கருத்தாக இருந்தது. சமகால அரசியல் தலைவர்களில் கரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்க குறித்து ஓர் நம்பிக்கை ஆதிலுக்கு காணப்பட்டாலும், அவர் அவர்களது பலவீனங்களை விமர்சிக்கத் தயங்கவில்லை. அந்த அர்த்தத்தில் அவர் நடுநிலையான ஓர் விமர்சகராக காணப்பட்டார் எனலாம். திறமை இருந்தும் இந்த நாட்டின் விதியை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத தலைவர்கள் குறித்து உரையாடிய ஆதில் இன்று எமக்கு மத்தியில் இல்லாவிடினும், இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பிரகாசிக்கச் செய்யும் அளவுக்கு திறமையை அவர் கொண்டிருந்தார் என்று கூற நான் தயங்க மாட்டேன். ஆதிலின் மறைவுடன் சிறந்த ஒழுக்கப்பண்புகள் மிக்க ஓர் பிள்ளையை பாக்கிர் மாக்காரின் குடும்பம் இழந்ததற்கு மேலதிகமாக முழு நாட்டுக்கும் பெறுமதியான ஒரு மகனை இலங்கைத் தாய் இழந்து விட்டாள் என்றே கூற வேண்டும். எனினும் வாழ்க்கை என்பது இது தான். வாழ்வினதும் மரணத்தினதும் வித்தியாசம் சிறு நொடிப்பொழுதே. இறுதியில் ஆதிலுக்கு அந்த பொதுவான விதிக்கு அடிபணிய வேண்டியேற்பட்டது. அவர் போன்ற ஓர் சிறந்த நண்பரை இழந்தமையினை எம்மால் தாங்கி; கொள்ள முடியாவிடினும், ஆதில் உனது பயணம் இனியதாக அமையட்டும் என இறுதியாக கூறிக் கொள்கிறோம்.
தருதலைகள் உள்ள இந்நாட்டில் ஆதிலுக்கு என்ன வேலை என இறைவன் அழைத்துக்கொண்டான்.
ReplyDelete