புதிய பயங்கரவாத, எதிர்ப்புச் சட்டம் இதுதான்..!
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், (CTA) முன்னரை விடக் கடுமையான உள்ளடக்கங்கள் காணப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டத்தின் கொள்கை மற்றும் சட்டவரைவு, தற்போது வெளியாகியுள்ள நிலையிலேயே, அதில் உள்ளடங்கியுள்ள விவரங்கள் குறித்துக் கவனம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், “பயங்கரவாதம், அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களிலிருந்து, இலங்கையின் ஒற்றுமையையும் ஆட்சிப்பரப்பின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காப்பதும் பாதுகாப்பதும்”, அதன் நோக்கமாக அமையுமெனக் குறிப்பிடப்படுகிறது.
58 பக்கங்களைக் கொண்ட குறித்த சட்டவரைவின்படி, இலங்கை சம்பந்தமான அல்லது இறையாண்மை மிக்க ஏதாவது நாடு சம்பந்தமான பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, ஆட்சிப்பரப்பு ஒருமைப்பாடு, இறையாண்மை சம்பந்தமாக கொள்கை முடிவொன்றை முழுமையாக மாற்ற, வேறுபடுத்த அல்லது மாற்றுவதற்கோ, அல்லது மேற்படி விடயங்கள் சம்பந்தமான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கவோ, இலங்கையையோ அல்லது இறையாண்மை மிக்க ஏதாவது நாட்டையோ, சட்டவிரோதமாகவோ அல்லது சட்டத்துக்கு முரணாகவோ நிர்ப்பந்தித்தல், பயங்கரவாதக் குற்றம் ஏனப்படுகிறது.
அதேபோன்று, இலங்கை அரசாங்கத்தையோ அல்லது இறையாண்மை மிக்க ஏதாவது தேசத்தினது அரசாங்கத்தையோ, சட்டத்துக்கு முரணான ரீதியில் மாற்றுதல் அல்லது கொள்கைசார் ஆதிக்கத்தை அடையும் நோக்கில், வன்முறையான அடிப்படைவாதத்தைப் பின்பற்றும் எந்த நடவடிக்கையும், பயங்கரவாதம் எனக் குறிப்பிடப்படுகிறது.
வேவு பார்த்தலும், பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதம், பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட குற்றம் அல்லது இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது குற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள சூழ்ச்சி செய்யும், தயாராகும், உடந்தையாக விரும்பும், அல்லது தயாராகும் எந்தவொரு நபருக்கும் வழங்கும் நோக்கில், இரகசியமான எந்தவொரு தகவலையும் பெறும் நோக்கில், சட்டரீதியற்ற, சட்டவிரோதமாக அல்லது அதிகாரமளிக்கப்படாத நடவடிக்கையில் ஈடுபடும்” எந்தவொரு நபர் மீதும், இச்சட்டம் பொருந்துவதாக அமையும். அதேபோன்று, மேற்படி குற்றங்களை மேற்கொள்வதற்கு முயலும் நபரொருவர், குறித்த விடயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்பதைப் பற்றி அறிந்த நிலையில் அல்லது அவ்வாறு நம்புவதற்கான போதிய காரணங்கள் உள்ள நிலையில், இரகசியத் தகவல்களைப் பகிருதலும் குற்றமாகும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு குற்றங்களுக்கும், 10 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படும். குற்றமொன்றைப் புரிவதற்காக, நபரொருவருக்கு கைக்கூலி வழங்குதல், தூண்டுதல், அச்சுறுத்தல் வழங்குதல், பலத்தைப் பயன்படுத்துதல் அல்லது வேறு எந்தவிதமான தூண்டுதலையும் பிரயோகித்தலும், தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கும், 10 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படும்.
ஏற்கெனவே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டமூலத்தில், சந்தேகநபரொருவருக்குச் சட்டத்தரணியின் அணுக்கம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட சரத்தும், இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்படுகிறது.
இதன்படி, சந்தேகநபரொருவரிடம் முதலாவது பொலிஸ் அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும் வரை அல்லது 48 மணிநேரங்கள் செல்லும் வரை (எது முதலில் நடக்கிறதோ, அது), சட்டத்தரணியொருவரைப் பெறும் வாய்ப்பு, அவருக்கு ஏற்படாது.
இந்தச் சட்டமூலம், சட்டமாக மாறுமாயின், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கும், பொலிஸ்மா அதிபரால், விசேடித்த பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவொன்று உருவாக்கப்படும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment