முஸ்லிம் விவாகவிவாகரத்துச் சட்டதிருத்தம், குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக அமையக்கூடாது - ரிஸ்வி முப்தி
நாட்டில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளமை நல்லவோர் நகர்வாகும்.
இந்த முயற்சிக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை தனது பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் தற்போதைய சூழலுக்கேற்ப குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாற்றமில்லாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது தொடர்பில் ஆராய 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சரினால் ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தயாரித்துள்ளது.
உலமாக்களும் அக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அந்தக்குழுவின் சிபாரிசுகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக உலமாசபை கடந்த காலங்களில் உலமாக்களுடனும் துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவுடனும் 20க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கிறது. இச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு உலமா சபை கடந்த காலங்களில் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நல்ல முயற்சிக்கு உலமா சபை தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும்.
மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விரைவில் சந்தித்து முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தனதுகுழு எதிர்வரும் 6 ஆம் திகதி கூடி முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார். தனது குழுவினது சிபார்சுகள் நவம்பர் மாதம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட மூலத்தை திருத்துவதற்கு அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்கென அமைச்சரவை முஸ்லிம் அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழுவொன்றினையும் நியமித்துள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயதெல்லை மற்றும் இச் சட்டத்தின் கீழ் காணப்படும் வேறு விடயங்கள் தொடர்பில் உள்ள சட்ட விதப்புரைகள் சர்வதேச நியமங்களில் குறிப்பிட்டுள்ள நியாய ஒழுக்கங்களுக்கு ஒத்திசையாத காரணத்தினாலே இச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி.வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காகவே இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விடிவெள்ளி ARA.Fareel-
Post a Comment