வக்பு சொத்துகள் மோசடிகள் தொடர்பாக. நாடெங்கிலுமிருந்து 80 முறைப்பாடுகள்
வக்பு சொத்துகளில் இடம்பெற்றுவரும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து சுமார் 80 முறைப்பாடுகள் வக்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களுக்கு வக்பு செய்யப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளை அனுப்பி வைத்திருக்கும் பொதுமக்கள் இம்மோசடிகள் தொடர்பான விசாரணைகளை உடன் ஆரம்பிக்குமாறு வக்பு சபைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கிறார்கள்.
வக்பு சொத்துகள், மோசடிகள் தொடர்பிலான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் விசாரணைகளின் போது சாட்சியமளிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாஸீனை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியபோது வக்பு சபைக்கு வக்பு சொத்துகள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகள் வக்பு சபை செயலாளரினால் தற்போது தரப்படுத்தப்பட்டுவருகிறது. முறைப்பாடுகள் அனைத்தும் பூரணமாக வாசிக்கப்பட்டு ஒவ்வொரு முறைப்பாட்டினதும் தன்மைக்கு ஏற்ப தரப்படுத்தப்படவுள்ளன. அதன்பின்பு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வக்பு சொத்துகள் ஊழல் மோசடிகளிலிருந்தும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
வக்பு சபை சில பள்ளிவாசல்களின் வக்பு சொத்துகள் தொடர்பான விபரங்களைச் சேகரிப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் விசேட டிரஸ்டி சபைகளை நியமித்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகர் பள்ளிவாசலை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்பள்ளிவாசலின் வக்பு சொத்துகளைத் தேடி பட்டியலிட்டு பாதுகாப்பதற்காக விசேட டிரஸ்டி சபை வக்பு சபையினால் நியமிக்கப்பட்டது.
அந்த டிரஸ்டி சபை வக்பு சொத்துகளை பட்டியலிட்டு பாதுகாத்து வருவதுடன் ஊழல்கள் ஏற்படா வண்ணம் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த டிரஸ்டி சபையை ஏனைய பள்ளிவாசல்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
வக்பு சொத்து அல்லாஹ்வின் சொத்தாகும். அது மக்களின் நம்பிக்கை நிதியமாகும். இச்சொத்துகளை தனியார் அனுபவிப்பதற்கோ கையாள்வதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.
Post a Comment