Header Ads



ஹிலாரிக்கு 70% முஸ்லிம்கள் ஆதரவு - டிரம்ப்புக்கு 4 சதவீதம்


 அமெரிக்க அதிபர் தேர்தலில் 72 சதவீத முஸ்லிம்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரிப்பதாகக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்களுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் இடையே உள்ள ஆதரவு குறித்து அமெரிக்க இஸ்லாமியர் நல்லுறவுக் குழு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எண்ணூறு முஸ்லிம்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 72 சதவீத முஸ்லிம்கள் ஹிலாரிக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு 4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவேன் என்று டிரம்ப் தனது பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது உள்ளிட்ட பல கடுமையான கருத்துகளை டிரம்ப் வெளியிட்டு வருவதால், அந்தப் பிரிவினரிடையே அவருக்கு ஆதரவு குறைவாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவர் பாதுகாப்பு, பயங்கரவாதம், தேசப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களைக் குறித்து முஸ்லிம்கள் கண்ணோட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. அமெரிக்காவில் சுமார் 33 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இவர்கள் 1 சதவீதத்தினர்.

ஹிலாரி முன்னிலை: ஃபாக்ஸ் தொலைக்காட்சி நாடு முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 45 சதவீத ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. டிரம்ப்புக்கு 38 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர். முற்போக்கு கொள்கையுடைய லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் கேரி ஜான்சன் 7 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும், பசுமைக் கட்சியைச் சேர்ந்த ஜில் ஸ்டைன் 3 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும் பெற்றனர்.

டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி நேரடியாகப் போட்டியிட்டால், ஹிலாரிக்கு 49 சதவீத ஆதரவும், டிரம்ப்புக்கு 41 சதவீத ஆதரவும் பெறுவர் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்கா முழுவதும் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைக் கண்காணித்து, புள்ளிவிவரம் வெளியிடும் ரியல் கிளியர் பாலிடிக்ஸ் என்ற அமைப்பின்படி, டிரம்ப்பைவிட ஹிலாரிக்கு வாக்காளர்களிடையே 6.7 சதவீத கூடுதல் ஆதரவு உள்ளது.

எனக்கு எதிராக சதி: டிரம்ப் குற்றச்சாட்டு

ஜனநாயகக் கட்சியின் சதித் திட்டத்துக்கு நான் இரையாகியிருக்கிறேன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ஃபுளோரிடா மாகாணம், வெஸ்ட் பாம் பீச் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: என் மீது பெண்கள் தெரிவித்துள்ள பாலியல் புகார்கள், அபத்தமானவை, உண்மைக்குப்புறம்பானவை.
அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. அரசியல் ஆதாயம் தேடும் நிறுவனங்களைப் போல, ஊடகங்களும் முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றன. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தங்கள் சுயநலம் கருதியே அமெரிக்க ஊடகங்கள் செயல்படுகின்றன.
எத்தனையோ பேர் வாழ்க்கையை அழித்தாவது, ஹிலாரியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் ஊடகங்கள் செயல்படுகின்றன. ஜனநாயகக் கட்சியின் சதித் திட்டத்துக்கு நான் இரையாகியிருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பவர்கள் பெண்களின் எதிரி, பேரினவாதி, சிறுபான்மை விரோதி, ஒழுக்கமில்லாதவன் என்று குற்றம்சாட்டப்படும் போக்கு உள்ளது என்று டிரம்ப் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

3 comments:

  1. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை வழிநடத்தப்போவது Zionist க்களே.

    ReplyDelete

Powered by Blogger.