ஒரு ஓநாயை கொல்ல, ரூ 65 லட்சம் செலவு செய்த அரசு
சுவிட்சர்லாந்து நாட்டில் விவசாயிகளின் ஆடுகளை வேட்டையாடி வந்த ஒரு ஓநாயை கொல்ல அந்நாட்டு அரசு ரூ 65 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் உரி மாகாணத்தில் அதிகளவில் விவசாயிகள் பண்ணை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
எனினும், இரவு நேரங்களில் பண்ணைக்குள் புகுந்த ஓநாய் ஒன்று ஆடுகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்த ஒரு மாகாணத்தில் மட்டும் 70 ஆடுகளை அந்த ஓநாய் வேட்டையாடி கொன்றுள்ளது.
விவசாயிகளின் புகார்களை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த ஓநாயை கொல்ல உரி மாகாண அரசு தீர்மானித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஓநாயை கொல்ல 23 வேட்டைக்காரர்கள் மற்றும் 9 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
வனப்பகுதியில் தங்கி தேடுதல் வேட்டையை தொடங்கிய இவர்கள் சுமார் 1066 மணி நேரங்களுக்கு பிறகு அந்த ஓநாயை சுட்டு கொன்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், ‘ஓநாயை கொல்ல ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தியது, வேட்டைக்காரர்களுக்கு ஊதியம் வழங்கியது, காட்டுப்பகுதியில் அதிக நேரம் இரவில் தங்கியது, உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக 43,500 பிராங்க்(64,42,874 இலங்கை ரூபாய்) செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 70 ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்தாண்டு ஓநாய் ஒன்று 55 ஆடுகளை கொன்ற காரணத்திற்காக அவற்றின் உரிமையாளர்களுக்கு 37,500 பிராங்க் இழப்பீடாக வழங்கப்பட்டது.
எனவே, தற்போது 70 ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தற்போது செலவிட்டுள்ள தொகையை விட கூடுதலாக 50,000 பிராங்க் செலவிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளின் பட்டியலில் ஓநாய் உள்ளது. சுவிஸ் நாடு முழுவதும் தற்போது 30 முதல் 40 ஓநாய்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment