Header Ads



அமைச்சரவையில் 45 நிமிடங்களாக, மைத்திரி கூறிய விளக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்தை, ஊடகங்கள் திரிவுபடுத்தியே செய்தியாக வெளியிட்டுள்ளன என்றும், தான் கூறிய கருத்துத் தொடர்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சுமார் 45 நிமிடங்களாக விளக்கமளித்தாரென்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நடைபெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். 

இலஞ்சம், ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமாச் செய்தமைக்கு ஜனாதிபதி கூறிய கருத்துத்தான் காரணம் எனக் கூறப்படுகின்றமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர், 

 “இப்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது, ஜனாதிபதியின் கருத்து அல்ல. ஜனாதிபதி கூறியதாகச் சொல்லப்படும் கருத்தேயாகும். தனியார் ஊடகங்களை விட, அரச ஊடகங்களும் இந்தத் தவறான செய்தியைதான் வெளியிட்டன” என்றார்.  

“ஜனாதிபதி, இது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் விளக்கினார். அதில் மூன்று முக்கிய விடயங்களை அவர் குறிப்பிட்டார். முதலாவது: அரசாங்கம் பிளவுபடும் என்று ஒரு கதை உள்ளது. அரசாங்கம் அவ்வாறு பிளவுபடாது. அவ்வாறு சொல்பவர்கள் தான் பிளவுபடுவார்கள் என்றுதான் ஜனாதிபதி கூறினார். 

இரண்டாவது: தோல்வியடைந்தவர்கள், அதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்குக் கனவு காண்கின்றனர். அவர்கள், பலத்துக்கு வருவதுதான் ஆசை.  

மூன்றாவது: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் 3 பேரை நீதிமன்றத்துக்கு கொண்டு வருகின்றனர். அதில் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும் முறைதான் பிழை என்று கூறினார். ஆனால், அதனை திரிவுபடுத்தி, கடற்படைத் தளபதிகளுடன் கோட்டாபயவை இணைத்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் தான் பிரச்சினை ஏற்பட்டது” எனவும் அவர் கூறினார்.  

“இவ்வாறான செய்தியால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய உள்ளிட்டவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர். இந்த கடற்படை தளபதிகள் வேறு யாருமல்லர், யுத்தத்தை வெற்றிகொள்ள உழைத்தவர்கள். அவர்களை இவ்வாறு நடத்துவது தவறாகும். இவர்களை நீதிமன்றத்தக்குக் கொண்டு வருவதென்றால், அதற்குரிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். 

இவர்களை இவ்வாறு நடத்துவதால், படைத்தரப்புக்குள் பிரச்சினை ஏற்படக்கூடும். தங்களுக்கு கட்டளையிட்டு வழிநடத்தி படைத்தளபதிகளை இவ்வாறு நடத்தும் போது, எதிர்காலத்தில் தமக்கும் இவ்வாறு ஏற்படலாம் என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம். 

ஜனாதிபதி தான் படைகளின் தலைவர். அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் கடமை, அவருக்கு உள்ளது. எனவே, முன்னாள் கடற்படைத் தளபதிகளை இவ்வாறு நடத்தியமை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 

இதேபோலதான், லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னெலிகொட, வசிம் தாஜுதின் உள்ளிட்டவர்கள் விவகாரமும் முடிவுக்கு வரவில்லை. என்னெலிகொட விவகாரத்தில், ஒரு வாரத்தில் அறிக்கை வழங்குவதாக ஜனாதிபதியிடம் அனுமதி வாங்கினார். பின்னர், 2 வாரம் என்றும் 3 மாதம் என்றும் காலத்தை நீடித்தனர். இன்னும் முடிவு தெரியவில்லை. இவ்வாறான சம்பவங்களால் எல்லோரையும் போல, ஜனாதிபதி கொண்டுள்ள கருத்தை, அவர் வெளியிட்டார். சுயாதீன ஆணைக்குழுக்களை ஜனாதிபதியே நியமிக்கின்றார். ஆனால், அவற்றின் செயற்பாட்டில் தலையிடுவதில்லை” என, அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.