Header Ads



பறிபோன பள்ளிவாசலை மீட்க 14 இலட்சம் ரூபா பணம் தேவை...

பொத்துவில் சின்ன உல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார். 

சுமார் 13 வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த பள்ளிவாயல் அமையப்பெற்றுள்ள காணி தனக்குச் சொந்தமானது என பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் கொழும்பை சேர்ந்த ஒருவரினால் வழக்குத் தொடரப்பட்டது. இதன் தீர்ப்புக்கமைய பள்ளிவாயல் காணி நிர்வாகத்திடமிருந்து பறிபோனது. பின்னர், அத்தீர்ப்புக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் பள்ளிவசாயல் நிர்வாகம் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்தது. இங்கும் இவ்வழக்கு தோல்வி கண்டு பள்ளிவாயல் பறிபோனது.

இதனால், நீதிமன்ற கட்டளைப்படி சுமார் ஒருவருடகாலமாக பள்ளிவாயல் இழுத்து மூடப்பட்டு சமய கடமைகள் இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் குடியியல் சட்டக்கோவை பிரிவு 328இன் கீழான விண்ணப்பமொன்றை 2015.6.16ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான தீர்ப்பு சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் கடந்த ஜுன் 16ஆம் திகதி வழங்கப்பட்டு பள்ளிவாயல் மீண்டும் திறக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஜுலை 28ஆம் திகதி வாதி பிரதிவாதிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட சமரசப் முயற்சி காரணமாக சுமார் 6 மாதத்திற்கிடையில் குறித்த பள்ளிவாயல் அமையப் பெற்றுள்ள காணி உரிமையாளருக்கு 24 இலட்சம் ரூபா பணத்தை கொடுக்க உடன்பட்டுள்ளனர். 

இத்தொகையை அறவிட்டுக் கொள்ள முடியாத நிலையில் பள்ளிவாயல் நிர்வாகம், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இன்று புதன்கிழமை அவரது அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தினர்.

இதன் போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபாவினை பள்ளிவாயல் மீட்பு நிதியத்திடம் கையளித்தார். இக்கலந்துரையாடலில் பொத்துவில் ஜும்மா பள்ளிவாயல் தலைவரும், மீட்பு நிதியத்தின் தலைவருமான எஸ்.எம்.சுபைர், செயலாளர் எம்.ஏ.எம். ஜௌபர் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


1 comment:

  1. அப்பீடியென்றால், காணி உறுதி இல்லாமலா பள்ளிவாயில் கட்டப்பட்டது??

    இது எந்த ஊரூ சட்டம் ஐயா?, அப்பிடியென்றால், அண்மைய பாடசாலை மைதானம், மாளிகவந்தை மயானம் எல்லாம் அடாத்தாக பிடித்த காணிகள் தானா?



    ReplyDelete

Powered by Blogger.