2017 இல் ஹஜ் செய்ய, நாடியுள்ளோர் பதிவு செய்க
அடுத்த வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பவர்கள் அதற்கென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தம்மைப் பதிவு செய்து பதிவிலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.
ஹஜ் கடமைக்காக ஏற்கனவே திணைக்களத்தில் பதிவுசெய்து கொண்டுள்ளவர்களுக்கு அடுத்தவருடம் ஹஜ்ஜில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீமின் செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
ஹஜ் கடமைக்காக ஏற்கனவே விண்ணப்பித்து கடமையை நிறைவேற்றாதுள்ள விண்ணப்பதாரிகள் தமது கடமையை உறுதிப்படுத்துமாறு கேட்கப்படவுள்ளார்கள். திணைக்களம் அவ்வாறானவர்களுக்கு கடிதங்களை அனுப்பிவைக்கவுள்ளது.
ஹஜ் கடமை மேற்கொள்ளவுள்ளவர்கள் தங்களை ஹஜ் முகவர்களிடம் பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை. திணைக்களத்தில் மாத்திரமே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலதிக கோட்டாவில் ஹஜ் கடமை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்து மேலதிக கோட்டா கிடைக்காது பாதிக்கப்பட்டவர்கள் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தால் அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகளில் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டிராது விட்டால் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.
-விடிவெள்ளி ARA.Fareel-
Post a Comment