ஸ்மார்ட் போன்களிலிருந்து உயிருக்கே, ஆபத்து விளைவிக்கும் 100 விஷ வாயுக்கள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களிலிருந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நூறுக்கும் மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேறுவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் என்.பி.சி. டிஃபன்ஸ் இன்ஸ்டிட்யூட், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது: பல முறை சார்ஜ் செய்யும் திறனுள்ள லித்தியம் அயன்பேட்டரிகள் பயன்படுத்துவதைப் பல நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. செல்லிடப்பேசி முதல் வாகனங்கள் வரை லித்தியம் அயன் வகை பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம் அயன் பேட்டரி அடிப்படையில் செயல்படும் செல்லிடப்பேசிகளை உலகெங்கும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஐம்பது சதவீதம் மின்னூட்டம் (சார்ஜ்) செய்த பேட்டரி வெளிப்படுத்தும் விஷ வாயுவை விடத முழுவதுமாக மின்னூட்டம் செய்யப்பட்ட பேட்டரியிலிருந்து அதிக அளவு விஷ வாயு வெளியேறுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பேட்டரிகளில் உள்ள ரசாயனப் பொருள்களும், அவை மின்னூட்டம் பெற்ற பின்னர் மின் சக்தியை வெளியேற்றும்போதும் விஷ வாயுக்கள் வெளியேறுகின்றன. ரசாயனங்களின் தன்மைக்கு ஏற்பவும்,
அவை பேட்டரியில் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொருத்தும், விஷ வாயு வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் விஷ வாயுக்களின் பெயர்கள், அவை வெளியேறுவதற்கான குறிப்பான காரணம் இவற்றை அறிந்து கொள்வதன் மூலம் அவற்றின் வெளியேற்றத்தைத் தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கார்பன் மோனாக்ஸைட் உள்ளிட்ட மிக ஆபத்தான விஷ வாயுக்கள் லித்தியம் அயன் பேட்டரிகளிலிருந்து வெளியேறுகின்றன. கார், விமானம் போன்ற குறுகிய இடங்களில் அதிக அளவிலான விஷவாயுக்கள் வெளியேற்றம் கண், சரும எரிச்சல், மூக்கு அரிப்பு போன்ற உபாதைகள் முதல் சுற்றுச்சூழலுக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் வல்லதாகும்.
இந்த ஆய்வில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவை தீப்பிடிக்கும் அளவுக்கு சுட வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்துமே விஷ வாயுக்களை வெளியேற்றின. பல பேட்டரிகள் சூடு தாங்காமல் வெடித்தன. நமது அன்றாட வாழ்வில் கூட, பேட்டரியில் பழுது காரணமாகவோ, அதிக உஷ்ணம் காரணமாகவோ தீப்பிடிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பேட்டரிகளை உருவாக்குவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்று
கருதப்படுகிறது. இந்த ஆய்வு குறித்த விவரங்கள் "நேனோ எனர்ஜி' ஆய்விதழில் வெளியாகியுள்ளன.
Post a Comment