ஜனாதிபதியாக இருந்த ஒருவர், உலகில் எந்த நாட்டிலாவது மீண்டும் MP ஆக வருவாரா..?
-Vi-
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இல்லாவிட்டால் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் உலகில் எந்த நாட்டிலாவது பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் வருவாரா என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி கேள்வியெழுப்பினார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டில் நல்லிணக்கம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஏற்பட்டுக்கொண்டு செல்லும் நிலையில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வந்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அவதானித்துச் செல்லவே அவர் வந்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மதிக்கும் வகையில் சர்வதேச தலைவர்கள் நாட்டுக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
அதேபோன்று அவர்களது நாட்டுக்கு வருமாறு எமது தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தில் ஊழல், மோசடிகள் இடம்பெறாது தடுக்கவேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கடமையாகும்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருக்கும் தூய்மையானவர்களே தன்னுடன் இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அப்படியாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பது மோசமானவர்களா? மஹிந்தவுடன் இருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல், மோசடி செய்தவர்கள் அனைவரும் அவருடன்தான் இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் நாளாந்தம் விசாரணைக்காக அழைக்கப்படுகின்றனர்.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்தாபகர் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவும் கட்சியை உடைத்துக்கொண்டு வந்துதான் கட்சி ஆரம்பித்தார். பண்டாரநாக்கவின் கொள்கையைத்தான் மஹிந்த ராஜபக்ஷவும் பின்பற்றுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கவின் காலத்தில் நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே இருந்தது.
அக்கட்சியில் இருந்து வெளியேறித் தான் கட்சி ஆரம்பித்தார் என்பதை கம்மன்பில அறியாமல் இருக்கின்றார். அத்துடன் நாட்டுக்கு உறுதியான எதிர்க்கட்சியின் தேவை கருதியே அவர் செயற்பட்டார். அதனால்தான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுதியாக இருக்கின்றது.
அதேபோன்று பண்டாரநாயக்க குடும்பம் தனது சொத்துக்களை நாட்டுக்காக கொடுத்த குடும்பமாகும். இதுதான் பண்டாரநாயக்கவுக்கும் மஹிந்தவுக்கும் உள்ள வித்தியாசமாகும். அத்துடன் நாட்டில் இருந்த அனைத்து கட்சிகளையும் மஹிந்தவே துண்டாடினார். தற்போது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். உலகில் எந்த நாட்டிலாவது பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் வருவாரா என்றார்.
If grand father become a father again any problems?
ReplyDelete