விக்னேஸ்வரன் செயற்படும் விதம், இனவாதிகளுக்கு போசனையூட்டுகிறது - JVP
வடக்கில் சிங்களவர்களை குடியமர்த்தக் கூடாது, பெளத்த விகாரை களை நிர்மாணிக்கக்கூடாது என கூறுவதைப்போல தெற்கில் தமிழர் களை குடியமர்த்த வேண்டாம் என்றோ அல்லது ஆலயங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்றோ கருத்து முன்வைக்கப்பட்டால் தமிழர்களின் நிலைமை என்னவாகும். வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எல்லைமீறி செயற்படுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.
விக்கினேஸ்வரன் போன்ற நன்கு கற்றவர்கள், நாட்டின் சட்டம் என்னவென்பதை அறிந்தவர்கள் இவ்வாறு அடிமட்ட நிலையில் இறங்கி இனவாதிகளுடன் கைகோர்ப்பது நாட்டின் சூழலுக்கு உகந்ததொன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் எழுக தமிழ் பேரணியின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அவ்வப்போது இனவாத கருத்துக்களை முன்வைத்து வடக்கில் மட்டுமல்லாது நாட்டில் சலசலப்பை ஏற்படுத்துபவர். கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். எனினும் அண்மையில் வடக்கில் நடைபெற்ற பேரணியில் மிகவும் பாரதூரமான வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும். இவரது கருத்துக்களை தமிழ் மக்களின் கருத்துக்களாக நாம் கருதவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்காத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலும் கூட முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் விக்கினேஸ்வரனின் கருத்துக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டு செயற்படும் வேளையில் இவ்வாறான மிகவும் மோசமான கருத்துக்களை வடமாகாண முதல்வர் முன்வைப்பது ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதைக்கு வித்திடாது.
அதேபோல் வடக்கில் விக்கினேஸ்வரன் செயற்படும் விதம் தெற்கில் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட இனவாதிகளுக்கு போசனையூட்டும் வகையில் அமைந்துள்ளது. விக்கியும் மஹிந்தவும் இனவாதத்தின் மூலம் நாட்டில் தமது அரசியல் பயணத்தை பலப்படுத்தவே முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் இவர்களின் பாதையை கட்டுப்படுத்த என்ன செய்யப்போகின்றது? இலங்கையில் சகல மக்களுக்கும் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமை உள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சகல பகுதிகளிலும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சுதந்திரம் உள்ளது.
Post a Comment