துருக்கி - சிரிய எல்லையில் இருந்து துரத்தப்பட்டுள்ள IS பயங்கரவாதிகள்
துருக்கி தனது சிரிய எல்லையில் இருந்து இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவை முழுமையாக வெளியேற்றியுள்ளது. துருக்கியின் சிரிய எல்லையில் இருக்கும் சிரிய நிலத்தில் இருந்து ‘அனைத்து தீவிரவாத அமைப்புகளும்” துரத்தப்பட்டு விட்டதாக துருக்கி பிரதமர் பினாலி யில்திரிம் அறிவித்துள்ளார்.
துருக்கி அரசு குர்திஷ் இன ஆயுதக் குழுக்களையும் தீவிரவாதிகளாக குறிப்பிடுகிறது.
துருக்கி எல்லையில் இருந்து வெளியேற்றப்பட்டதன் மூலம் ஐ.எஸ் குழுவுக்கு வெளியுலகுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மேற்கில் ஜரப்லுஸ் நகர் தொடக்கம் கிழக்கில் கடைசி எல்லை கிராமத்தையும் ஐ.எஸ்ஸிடம் இருந்து மீட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக துருக்கி எல்லையில் நீடித்த ஐ.எஸ்ஸின் பிரசன்னம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த முன்னேற்றம் ஐ.எஸ்ஸின் தீர்க்கமான ஆட்சேர்ப்பு மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்கான விநியோகப் பாதைகளை துண்டிப்பதாக உள்ளது. துருக்கி தனது எல்லைப் பகுதியை பாதுகாக்கவெனக் கூறி கடந்த வாரம் சிரியாவுக்குள் இராணுவத்தை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் சிரியாவுக்குள் கடந்த மாதம் கிளர்ச்சியாளர்களிடம் இழந்த அலெப்போ நகரின் சில பகுதிகளை சிரிய அரச படை மீட்டுள்ளது. சிரியாவில் துருக்கி இராணுவத்தின் வெற்றிகள் பற்றி கடந்த ஞாயிறன்று ஆற்றிய தொலைக்காட்சி உரை ஒன்றின்போதே துருக்கி பிரதமர் பினாலி யில்திரிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“அஸாஸ் தொடக்கம் ஜரப்லுஸ் வரை சிரியாவுடனான 91 கிலோமீற்றர் எல்லை பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
“அனைத்து தீவிரவாத அமைப்புகளும் பின்வாங்கச் செய்யப்பட்டன. அவர்கள் காணாமல்போய்விட்டார்கள்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ்ஸை போன்றே சிரிய குர்திஷ் குழுவொன்றான வை.பீ.ஜியையும் துருக்கி தீவிரவாதிகளாக கருதுகிறது. எனினும் வை.பீ.ஜி குழுவுக்கு அமெரிக்கா அதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு சிரியாவில் செயற்கையான தேசம் ஒன்றை உருவாக்க துருக்கி ஒருபோதும் இடமளிக்காது என்று யில்திரிம் உறுதி அளித்தார்.
ஐ.எஸ் பின்வாங்கியதை அடுத்து துருக்கி மற்றும் சிரிய எல்லையில் இருக்கும் பல கிராமங்களையும் “துருக்கி டாங்கிகள் மற்றும் போர் விமானங்களின் உதவியோடு கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்லாமியவாதிகள்” கைப்பற்றி இருப்பதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. எல்லைப் பகுதியில் ஐ.எஸ்ஸின் பிரசன்னம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment