சிரியா நாட்டு பெண்ணுக்கு துருக்கிய விமானத்தில் பிறந்த குழந்தை - விமானிகளிடம் உருக்கமான கோரிக்கை
நடுவானில் பறக்கும் விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா நாட்டை சேர்ந்த 30 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் துருக்கியை சேர்ந்த Pegasus என்ற விமானத்தில் நேற்று முன் தினம் பயணம் செய்துள்ளார்.
துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் நகரில் இருந்து சுவீடன் நாட்டில் உள்ள Stockholm நகருக்கு அந்த விமானம் புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் 9 மாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் முன்னாள் செவிலியர் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.
கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடிப்பதை பார்த்த விமானிகள் உடனடியாக அருகில் உள்ள நாடான உக்ரைனில் அவசரமாக தரையிறங்க தீர்மானித்துள்ளனர்.
விமானிகளின் முடிவை அறிந்த கர்ப்பிணி பெண், ‘தயவுசெய்து உக்ரைன் நாட்டில் தரையிறங்க வேண்டாம். என்னால் பிற பயணிகள் சிரமப்படக்கூடாது. நீங்கள் சுவீடன் நாட்டிற்கு நேராக செல்லுங்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
கர்ப்பிணி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற விமானிகள் உக்ரைன் நாட்டில் தரையிறங்காமல் சுவீடன் நாட்டிற்கு பறந்துள்ளனர்.
எனினும், சுவீடன் நாட்டில் தரையிறங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாகவே கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர், விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் தாயாரும் குழந்தையும் எடுத்துச்செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விமானம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நிகழும் என்றும், தற்போது மருத்துவமனையில் தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக’ தெரிவித்துள்ளது.
Post a Comment