"சிறியதும் பெரியதாகலாம்" அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்..!
ஆரோக்கியம் சரியில்லை என அவ்வப்போது அடிக்கிற அலாரங்களை அலட்சியப்படுத்துவதில் பெண்களுக்கே முதலிடம். சகித்துக் கொள்ள முடியாத நிலைக்கோ, சுய மருத்துவத்துக்கோ கட்டுப்படாத நிலையில்தான் மருத்துவரை அணுகுவது பலருக்கும் வழக்கம். இந்த அணுகுமுறை தவறானது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் திருத்திக் கொள்ள பலரும் தயாராக இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். "சில அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் பெரிய பயங்கரத்துக்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம். ஆகவே, அசாதாரணமான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தாதீர்கள்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அப்படி அலட்சியப்படுத்தக்கூடாத சில அறிகுறிகளையும் விளக்குகிறார் அவர்.
மாரடைப்பு
மார்பின் மையப் பகுதியில் ஏற்படுகிற அசவுகரியமான உணர்வு அல்லது வலி, அந்த வலி கைகள், முதுகு, தாடை அல்லது வயிற்றுக்குப் பரவுவது, திடீர் வியர்வை, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி போன்றவை இருந்தால், மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். பெண்களுக்கு மாரடைப்பு வராது என்கிற நிலையும் இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் மாறி வருகிறது. ஆண்களைப் போல நெஞ்சு வலியை ஏற்படுத்தி, அறிகுறியைக் காட்டாமல், பெண்களை அமைதியாக அட்டாக் செய்யக்கூடியது மாரடைப்பு என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
பக்கவாதம்
திடீரென வரும் கடுமையான தலைவலி, பேச்சு, நடை, பார்வை போன்றவற்றில் பேலன்ஸ் தவறுவது, குழப்பம், முகம், கை, கால்களில் மரத்துப் போகிற உணர்வு போன்றவை ஏற்பட்டால் டென்ஷன் என்றோ, வயதாவதன் அறிகுறி என்றோ நினைக்க வேண்டாம். அவை எல்லாம் பக்கவாதத்துக்கு மிகப் பக்கத்தில் இருக்கும் விஷயங்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள்
ஒரு மாதவிலக்குக்கும் அடுத்ததற்கும் இடையில் ஏற்படுகிற திடீர் ரத்தப் போக்கு, எரிச்சல், அரிப்பு, கடுமையான இடுப்பு மற்றும் முதுகுவலி, அந்தரங்க உறுப்பிலிருந்து அசாதாரண கசிவு, வயிறு உப்புசம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவை இனப்பெருக்க உறுப்புகளில் ஏதோ கோளாறு என்பதை உணர்த்துகிற விஷயங்களாக இருக்கலாம். உடனே மருத்துவரைப் பார்க்கவும்.
மார்பகப் பிரச்னைகள்
மார்பகங்கள் திடீரென மென்மையாவது, வலி, மார்பகக் காம்புகளில் அசாதாரணக் கசிவு, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சருமத்தில் நிறம் மாறுவது, வீங்குவது, சிவந்து போவது போன்றவை இருந்தால் தயங்காமலும் தாமதிக்காமலும் மருத்துவரை அணுக வேண்டும். தவிர, அக்குள் பகுதியிலும் மார்புப் பகுதியிலும் கட்டிகள் போன்று தெரிந்தாலும் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.
வயிற்றுப் பிரச்னைகள்
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு, தொடர்ச்சியான நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, கொஞ்சம் சாப்பிட்டாலே மூச்சு முட்டுகிற மாதிரியான உணர்வு, வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல், அவற்றின் நிறம் மாறுவது போன்றவை செரிமான உறுப்புகளில் பிரச்னை என்பதை உணர்த்துபவை. இவை எல்லோருக்கும் வரக்கூடிய சாதாரண பிரச்னைகள் என்கிற அலட்சியம் கூடவே கூடாது.
சருமப் பிரச்னைகள்
திடீரெனத் தோன்றும் மச்சம், ஏற்கனவே உள்ள மச்சங்களின் நிறம், வடிவம் மற்றும் அளவு மாறுவது, திடீரெனத் தோன்றும் மிருதுவான, பளபளப்பான, மெழுகு போன்ற கட்டி, சில நேரங்களில் அடர்சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் தோன்றுகிற கட்டி, அதில் வலி மற்றும் அசாதாரண கசிவு... இவை எல்லாம் 2 வாரங்களுக்குள் சரியாகாதது தெரிந்தாலும் அவசரமாக மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
Post a Comment