சாமி ஐயர், மரணித்து விட்டார் - பள்ளிவாசலில் அறிவிப்பு
அன்புக்கும் நட்புக்கும் தோழமைக்கும் மதம் எந்த விதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அடையாளமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ராமு ஐயர். இவர் தொழில் தொடங்க வேண்டி கேரளத்தில் இருந்து கோவைக்கு வந்தவர். கோவையை பொறுத்த வரை உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர் போன்றவை இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. கேரளத்தில் இருந்து கோவைக்கு வந்த சாமி அய்யர் கடந்த 1982ம் ஆண்டு கரும்புக்கடை சாரமேடு சாலையில் இரும்புக் கழிவுத் தொழில் தொடங்கினார்.
கரும்புக்கடைப் பகுதியில் இரும்புக்கடை தொடங்கியதில் இருந்து, ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் சாமி ஐயருக்கு கிடைத்தனர். இந்தத் தொழிலில் ஏராளமான இஸ்லாமியர்களும் ஈடுபட்டிருப்பததால், அந்த வகையிலும் சாமி ஐயருக்கு ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். சாமி ஐயரின் குடும்பத்தினரும் அக்கப் பக்கத்தினருடன் பாசமாக பழகி வந்தனர். இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் நடைபெறும் அனைத்து விசேஷ வைபவங்களிலும் சாமி ஐயர் குடும்பத்துடன் பங்கேற்பார். துக்க தினங்களில் முதல் ஆளாக ஆஜராகி விடுவது வழக்கம். இதனால் சாமி ஐயரின் குடோவுன் அருகில் இருந்த மஸ்துல் ஹீதா பள்ளி வாசலில் அறிவிக்கப்படாத உறுப்பினராகத்தான் சாமி ஐயர் இருந்தார்.
இந்த மசூதிக்கு வரும் அத்தனை இஸ்லாமிய மக்களுக்கும் சாமி ஐயர் தெரியும். அதேபோல் இஸ்லாமிய மக்களும் சாமி ஐயர், அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். சாமி ஐயர் வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால், இஸ்லாமிய மக்கள்தான் முன்னின்று நடத்துவார்கள். அந்தளவுக்கு அந்த பகுதி மக்களுடன் சாமி ஐயரும் அவரது குடும்பத்தினரும் நெருங்கிப் பழகி விட்டனர்.
80 வயதான சாமி ஐயர் நேற்று திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து அவரது மரணம் குறித்து மஸ்துல் ஹீதா பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சாமி அய்யரின் வீட்டு விலாசத்தோடு ''நமது சாரமேடு மெயின் ரோட்டில் உள்ள இரும்புக்கடை உரிமையாளர் சாமி ஐயர் மரணித்து விட்டார்கள். அன்னாரின் இறுதிச்சடங்கு புட்டு விக்கி மயானத்தில் இன்று 21 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து ஒருவரின் மரண அறிவிப்பு பள்ளிவாசலில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது சாமி ஐயர் அந்த பகுதி மக்களுடன் எந்தளவுக்கு நெருங்கிப் பழகியிருக்கிறார் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.
ஏனென்றால் பெரும்பாலான பள்ளி வாசல்களில் மற்ற ஜமாத்தை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தால் கூட அறிவிப்பு பலகையில் அறிவிக்கை வெளியிடத் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், சாமி ஐயரின் 'அன்பு ' ஜமாத்தின் அத்தகைய கட்டுப்பாடுகளை தளர்த்த வைத்துள்ளது.
விகடன்
Post a Comment