வடகிழக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை, தமிழர்கள் அரவணைக்க வேண்டும் - றிசாத்
-சுஐப்.எம்.காசிம்-
வட பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையே எளிதாகவும், விரைவாகவும், சிக்கனமாகவும், பயணஞ் செய்யக் கூடிய வகையில் எலுவன்குளம் பாதையை நாங்கள் கடந்த அரசில் திறந்த போது அதனை எதிர்த்து இனவாதிகள் நீதிமன்றம் வரை சென்று பாதை திறக்கப்பட்டதை தடுத்ததனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வேதனை வெளியிட்டார்.
மன்னார் முசலிப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றிய போது கூறியதாவது,
எலுவன்குள பாதையை திறந்து வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், தென்னிலங்கையில் இந்தப் பிரதேச வியாபாரப் பொருட்களை சந்தைப்படுத்தி, மக்கள் பயன்பெறக் கூடிய வகையிலுமே நாம் அந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்.
கடந்த அரசின் உயர்மட்ட, பலம் வாய்ந்த முக்கியஸ்தர்களைக் கொண்டே பாதையை திறந்து வைத்தோம். இந்தப் பாதையை காபெட் இடுவதற்காக சீன அரசிடம் இருந்து கடனாக நிதியுதவி பெற்ற போதும், அந்த நிதியைக் கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இனவாதிகள் மேற்கொண்ட ஈனச்செயல்களால் அது மீண்டும் மூடப்பட்டது.
அந்த வழக்கில் என்னையும் ஒரு பிரதிவாதியாகப் போட்டு வழக்கு இன்னும் தொடர்கின்றது.
இந்த மாவட்டத்தில் எம்மால் முடிந்தவரை பணிகளை மேற்கொண்டுள்ளோம். மேற்கொண்டும் வருகிறோம்.
மன்னார் – சங்குப்பிட்டி கடல் வழிப் பாதைக்கு பாலம் அமைக்க 50 வருடங்களாக மீண்டும் மீண்டும் அடிக்கல் நாட்டி வந்தமை வரலாறு. எனினும் கடந்த அரசில் முக்கிய சிரேஷ்ட அமைச்சரொருவரின் உதவியுடன் அந்தப் பாதைக்கு அடிக்கல் நாட்டி ,பாலம் போட்டு இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் ஊடாக தென்னிலங்கை செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தினோம்.
இந்த வரலாறுகளை எவரும் திரிபுபடுத்திவிட முடியாது. அதனை மறந்து விடவும் முடியாது.
நமது நாட்டில் சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைக்கும் மனோபாவமும் மனப்பாங்கும் வளர வேண்டும். இது சிங்கள சமூகத்தினருக்கோ, தமிழ்ச் சமூகத்தினருக்கோ மட்டும் என்றில்லாது நமக்கும் அது பொருத்தமானதே.
மன்னாரிலே முசலிப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழ்கின்றனர். முசலியின் அரசியல் அதிகாரம் நமது கைகளுக்குக் கிடைக்கும்போது இங்கு வாழும் தமிழர்களையும், சிங்களவர்களையும் நாம் அரவணைக்க வேண்டும். அவர்களுக்கும் உதவ வேண்டும்.
அதே போல வடக்குக் கிழக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக வாழும் தமிழர்களும் அரவணைக்க வேண்டும். இதன் மூலமே உண்மையான சமாதானத்தை அடையமுடியும் என அமைச்சர் கூறினார்.
Post a Comment