மலைக்கவைக்கும் மஹிந்தானந்த, எதிரியான மனைவி, பிடியிலிருந்து தப்புவாரா..?
-ரவி-
ஒருங்கிணைந்த எதிர்க் கட்சி எனக் கூறிக் கொள்ளும் குழுவின் முக்கியஸ்தரான மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு குருந்துவத்தையில் ஆடம்பரமான சொகுசு வீடொன்றை இரண்டு கோடி எழுபது இலட்ச ரூபாவுக்கு வாங்கியது தொடர்பாக நிதி மோசடி பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். நிதி மோசடி சட்ட 03 மற்றும் 04 பிரிவின்படி சட்டவிரோதமாக பணத்தைச் சேர்த்தல், அப்பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பதை தெளிவுபடுத்த இயலாமை, சொத்துகளின் மதிப்பை வழங்கத் தவறியமை என்பவற்றிற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் மோசடி தொடர்பாக குரலெழுப்பியவர் எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆவார். கங்கசிறிபுர வித்தியாலயத்தில் கல்வி கற்ற மகிந்தானந்த அளுத்கம கொழும்பு ரோயல் கல்லூரிக்கு அனுமதி பெற்றது அவரின் தந்தையின் வரப்பிரசாதத்தால்தான். மகிந்தானந்தவின் தந்தையாரான மீதலாவே சைமன் அளுத்கமகே சில காலம் நாவலப்பிட்டி ஸ்ரீல. சு. க. உறுப்பினராக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ரோயல் கல்லூரிக்கு அனுமதி பெற்றாலும் அங்கு அவர் தனது திறமையை வெளிக்காட்டவில்லை.
தந்தையின் பின்னர் அவரது தமையன் விஜயானந்த நாவலப்பிட்டி ஸ்ரீல. சு. க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டாலும் அதில் நீண்ட காலம் இருக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது எழுச்சி காரணமாக ஸ்ரீல. சு. கட்சியின் அரசியல் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னரே மஹிந்தானந்த அரசியலுக்குள் பிரவேசித்தார்.
1993 ஆம் ஆண்டு மகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது சிறிமாவோ பண்டாரநாயக்காவால் போட்டியிட அழைக்கப்பட்டார். அப்போது 1250 ரூபாவில் நிதி நிறுவனமொன்றில் சேவையாற்றி வந்தார். பின்னர் கேகாலை மற்றும் கண்டியில் ஏ அன்ட் ஆர் என்னும் சொத்து நிறுவனம் ஒன்றை அமைத்தாலும் அதுவும் நல்ல நிலைமையில் இயங்கவில்லை. ஆகவே உடனடியாக அவ்வழைப்பை ஏற்று தேர்தலில் போட்டியிட்டார்.
ஊழல் மோசடி தொடர்பாக மஹிந்தானந்தவுக்கு பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரின் சொகுசு வாழ்க்கை மற்றும் வருமானமீட்டல் தொடர்பாக அவரது மனைவி ஆஷா விஜயந்தி விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்த போதே தெரியவந்தது.
அவர் அதிகளவு நட்டஈடு பெறுவதற்காக அளுத்கமவின் வருமானம் மற்றும் சொத்துத் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்துக்கு பெற்றுக் கொடுத்திருந்தார். பின்னர் அவ்விபரங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடாக அளிக்கப்பட்டன. 1200.00 ரூபா மாத வருமானமாக நீண்ட காலம் பெற்று வாழ்ந்த ஒருவர் எவ்வாறு இவ்வளவு பணம் மற்றும் சொத்துக்களைப் பெற்றார் என்பது நம்ப முடியாத விடயமாகும். அளுத்கமவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்ததும் ராஜபக்ஷவின் ஆதரவாளரான ஜகத் பாலப்பட்டபெந்தி தலைமையிலான ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்போது மறைக்கப்பட்ட மஹிந்தானந்தவின் பத்திரங்கள் நல்லாட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் மீள்விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதன்படி நிதி மோசடி சட்டத்தின் கீழ் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்கு இல. B 22467/ 1/ 2015 கீழ் அளுத்கமவிற்கு எதிராக பொலிஸ் நிதிக் குற்றவியல் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட விபரங்களின்படி 1987 ஆம் ஆண்டு நிதி நிறுவனமொன்றில் கடன் வசூலிப்பாளராக கடமை புரிந்து 1200 வருமானம் பெற்ற மஹிந்தானந்த குறுகிய காலத்தில் கீழ்வரும் சொத்துக்களைப் பெற்றுள்ளார்.
பொரளை குறுப்பு பாதையில் இல. 66 என்னும் 20.85 ேபர்ச்சஸ் காணியில் வீடு, கண்டி ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தையில் இல. 309 லீ என்னும் வீடு மற்றும் அதே முகவரியில் 18.03 பேர்ச்சஸ் காணி, ராஜகிரிய, நாவல ரோட், சந்திரா வெத்தசிங்க மாவத்தை இல. 15/ 1 என்னும் இடத்தில் 15.05 ேபர்ச்சஸ் காணி. எல்விடிகல மாவத்தை, டிரிவியம் ரெஸிடென்ஸில் இல. 159/ 9/ 2 என்னும் வீடு (285 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டது) கொழும்பு 07, கிங்ஸி ரோட் இல. 70/ 3/ 1 என்னும் வீடு 270 இலட்ச ரூபாவுக்கு வாங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இங்கிலாந்தில் வீடொன்று, சிங்கப்பூரில் 5.05 இலட்ச ெடாலர் வைப்பு என்பன மஹிந்தானந்தவுக்கு உள்ளன.
மிகக் குறுகிய காலத்தில் அவர் பெற்றுள்ள இச்சொத்துக்களுக்கு வருடாந்த சொத்துக்கள் கடன்கள் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை. அதோடு வெளிநாட்டிலுள்ள வைப்புகள் பற்றியும் விபரங்களை அறிவிக்கவில்லை.
இதைத் தவிர கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத் தொகுதியில் உள்ள சேம்பர் ஓப் கிப்ட் மற்றும் விடு லங்கா (V – DOOLANKA) நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். இவற்றோடு குற்றச்சாட்டுகள் முடிந்து விடவில்லை. விளையாட்டு அமைச்சராக இருந்த வேளையில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சின் ஒப்பந்தமொன்றை தனது ஆதரவாளரான கவிது பில்டர்ஸ் நிறுவனமொன்றுக்கு வழங்கி உள்ளார். வீரவீராங்கனைகளின் வெளிநாட்டு விஜயங்களின் போது விமான பயணச் சீட்டுக்களை ரத்வத்தை என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். அனைத்தையும் அவர் விருப்பப்படியே செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கெரம் போர்ட் 14000 ம் மற்றும் டாம் போர்ட் 14000 ம் வாங்கியுள்ளார். ஆனால் அவை விளையாட்டு அமைச்சின் களஞ்சியசாலைக்கு கிடைக்கவில்லை. பின்னர் கெரம் போர்ட் 14000 மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளுக்காக பொருட்கள் விநியோகிக்கும் களஞ்சியசாலையிலிருந்து கண்டிபிடிக்கப்பட்டது. அக்களஞ்சியசாலையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகனின் படங்களுடன் கூடிய சுவர்க் கடிகாரங்கள் ஒரு இலட்சமும் கண்டுபிடிக்கப்பட்டன. லக் கூ. மொ. நிலையமூடாக கெரம் போர்ட் மற்றும் டாம் போர்ட் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதுடன் அந்நிறுவனத்துக்கு 390 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மஹிந்தானந்தவிடம் 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையில் தன்னிடமிருந்த வாகன அனுமதி பத்திரங்கள் 5 விற்று 50 மில்லியன் ரூபா பெற்றதாகக் கூறினார். அது உண்மையென்றால் அங்கேயும் அவர் தவறு செய்துள்ளார். அதன்படி அரசுக்கு சேர வேண்டிய வரியை ஏய்ப்புச் செய்துள்ளார்.
தனது சொத்தில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்து தனது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நீண்ட நாட்கள் ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக தனியார் நிறுவனத்தில் கடமையாற்றிய அவரால் தர்க்க ரீதியாக முதலீடு செய்ய முடியாது. ஜப்பானில் உள்ள சகோதரன் பணம் அனுப்பியதாகக் கூறினாலும் சட்டத்திலிருந்து தப்பிக்க போதுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.
Post a Comment