Header Ads



'பெரும்பான்மை கட்சிகளுடன் மோத வேண்டிய கட்டம், உருவாகி வருகிறது'

'இன்றுள்ள 160 தேர்தல் தொகுதிகளை 140 ஆக குறைத்து, விகிதாசார ஆசனங்கள் என 93 ஆசனங்களை வழங்கி, வெற்றி பெறும் கட்சிக்கான ஸ்திரத்தன்மை போனஸ் என்றும் வேறு தேவைகளுக்கான போனஸ் என்றும் 7 மேலதிக ஆசனங்களையும் ஒதுக்கி மொத்த நாடாளுமன்ற உறுப்பினர் தொகையை 240 ஆக அமைக்கும் புதிய தேர்தல் முறைமையை ஏற்றுகொள்ளும் படியும், பல்-அங்கத்தவர் தொகுதிகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும்  பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை கட்சிகள் மீது அழுத்தம் செலுத்துகின்றன. இந்நிலைமை பற்றி முதன்முறையாக நான் பகிரங்கமாக இன்று சொல்கிறேன்' என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

 'தேர்தல்முறை  மாற்றம் தொடர்பில் ஒப்பீட்டளவில் தென்னிலங்கை சிறுபான்மை கட்சிகள் எதிர்நோக்கும் அளவில் சவால்களை எதிர்கொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழுவில் இன்னமும் அதிகமாக சகோதர சிறுபான்மை கட்சிகளுக்கு சார்பான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் என வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இரா சம்பந்தன், சுமந்திரன் ஆகிய எம்பிகளை எமது தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

'தேர்தல் தொகுதிகளுக்கும், விகிதாசார ஆசனங்களுக்கும் இடையேயான விகிதாசாரம் 60-40 என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என பேசப்படுகிறது.  ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு மாகாணசபை தொகுதிகள் அமைய வேண்டும் என்ற கருத்தும் இங்கு பேசப்படுகிறது. இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தல் முறைமை மட்டுமல்ல, எதிர்வரும் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும் முறைமையும் இங்கு தீர்மானிக்கப்பட உள்ளது. தென்னிலங்கையின் மூன்று கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த விவகாம் தொடர்பில் பெரும்பான்மை கட்சிகளுடன் மோத வேண்டிய கட்டம் உருவாகி வருகிறது. 

ஜே.வி.பி, ஈ.பி.டி.பி ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. குறிப்பாக 160 தேர்தல் தொகுதிகளை 140 ஆக குறைக்கும் போது இன்று இருக்கும் சிறிய தொகுதிகள் ஒன்றிணைக்கப்படும். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான பிரத்தியேக தேர்தல் தொகுதிகளை உருவாக்கி கொள்வதில் நாம் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகிறோம் என்பதை தமிழ் பேசும் மக்கள்  உணரவேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.  

  'இந்நாடு தமிழ் மக்கள் ஜனத்தொகையில் சுமார் 50 விகிதமும், முஸ்லிம் மக்கள் ஜனத்தொகையில் சுமார் 65 விகிதமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலேயே வாழ்கின்றன என்ற அடிப்படை உண்மை இங்கே புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். பல்-அங்கத்தவர் தொகுதிகளையும் அகற்றும் நிலைப்பாடு நிலைமையை இன்னமும் மோசமாக்குகிறது. எனவே குறைந்தபட்ச மட்டத்திலாவது போதுமான தேர்தல் தொகுதிகளை நாம் நிர்ணயம் செய்துக்கொள்ள முடியாவிட்டால், நமது பிரதிநிதித்துவம் கேள்விக்குறியில் முடிந்துவிடும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். 

விகிதாசார ஆசனங்கள் என 93 ஆசனங்களை ஒதுக்கப்பட்டாலும், அவற்றை பெற்றுக்கொள்வதில் நாம் பெரும்பான்மை கட்சிகளுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்படும். அது ஒரு நிச்சயமற்ற கனவு. எமக்கான தேர்தல் தொகுதிகள் ஒதுக்கீடு என்பதே நிச்சயமான யதார்த்தம். இந்த அடிப்படையிலேயே எங்களது கருத்துகளை நாம் முன்வைத்து வருகிறோம். இது தொடர்பான சிறுபான்மை கட்சிகள் மத்தியிலான ஒரு கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை  கொழும்பில் நடைபெற உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார். 

1 comment:

  1. This is one of the results from good governence government. The majority political parties never flexible in the minority matter.

    ReplyDelete

Powered by Blogger.