கெட்டவர் என்று, எவரையும் ஒதுக்காதீர்கள்
-நிதுர்-
ஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இது விதியா? பிறப்பினால் வந்ததா? அல்லது வியாதியா? சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் காரணங்கள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு விடை கிடைக்க உதவலாம். அதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா என்பதிலும் நமக்குள் ஓர் ஆய்வு தேவையாகலாம்.
நல்லவர்கள் நல்லவர்களாக தொடர்ந்து இருப்பார்களா? இதனையும் நாம் சிந்திக்க வேண்டும்.
நல்லவனாவதும் கெட்டவனாவதும் இறைவன் வசம்தான் உள்ளது என்று அனைத்து பொறுப்பையும் அதன் பாரத்தையும் இறைவன் மீது போட்டு தப்பிக்க முயல்வது இயலாமையைத்தான் காட்டுகின்றது.
சூழ்நிலை, சந்தர்ப்பம், பரம்பரை, நட்பு இவைகள் ஒரு காரணமாய் இருந்து ஒருவர் கெட்டவர்களாக மாறிவிட்டார் என்பதில்தான் நம் கவனம் உள்ளது. என் பையனை அவன் கெடுத்து விட்டான் என்று மற்றவர் மீது குற்றம் சாட்டி நாம் தப்பித்துக் கொள்கின்றோம். ஒருவர் கெட்டவராக மாறிப் போவது அவரே ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்பதை நாம் சிந்திப்பதில்லை.
பிறக்கும்போது நல்லவர் கெட்டவர் என பாகுபாடின்றியே பிறக்கின்றனர், அதனால்தான் ஏழு வயது வரை இஸ்லாத்தில் இறை வணக்கமும் (தொழுகையும்) அவர்களுக்கு கட்டாய கடமை இல்லை. குழந்தைகள் இறந்து விட்டாலும் அவர்கள் இறைவனது கேள்விகளுக்கு உட்படுத்தப்படாமல் சுவனம் சென்று விடுகின்றார்கள். இவர்கள் நல்லது மற்றும் கெட்டது அறியாதவர்கள். அவர்கள் வளர்ச்சி அடைந்து அவர்கள் அறிந்து செயல்படும் தீய குணங்களால் விளையும் செயல்களே அவர்கள் கெட்டவர் அல்லது நல்லவர் என்ற பட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
நல்லவர் அல்லது கெட்டவர் ஆவது மற்றவர்களால் மற்றும் வளர்ப்பின் முறையால் வந்ததாகி விடுகின்றது. அவர் தீய பழக்கங்களுக்கு ஆளாக்கப்பட்ட பின் சமுதாயம் அவர்களை புறம் தள்ளி வைக்கின்றது. அப்படி வைக்கப்பட்டவர் வெளிப் பார்வைக்கு கெட்டவராகத் தெரியலாம். ஆனால் அப்படி தள்ளி வைக்கும் சமுதாயம் அவர்கள் தங்கள் மனதளவில் நல்லவர்களா! என்று சிறிது சிந்தித்து பார்க்கட்டும். எந்த மனிதனையும் ஒதுக்காதீர்கள். அவர்கள் ஓரங்கட்டப் பட்டால் இன்னும் அவர் மோசமான, பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டதில் நல்லவர் போர்வையில் இருக்கும் நாமே ஒரு குற்றவாளியாகி விடுவோம்.
நமது அங்கத்தில் அவரும் ஒருவர், நம் உடம்பில் எந்த பகுதியல் நோய் வந்தாலும் அனைத்து உடலும் பாதிக்கும். நம்மால் கெட்டவர் என ஒதுக்கப்பட்டவர் மன உளைச்சல் மற்றும் மன நோய்கள் வந்து மிகவும் பாதிக்கப்படுவார்.
இறைவன் நோயை கொடுத்தாலும் அதற்குரிய மருந்தும் கொடுத்துள்ளான் அதனை கண்டு பிடிப்பதனை நம் ஆய்வில் விட்டுள்ளான். அதுபோல் கெட்டவரையும் நல்லவராக்க மருந்தால் குணமாக்க முடியாது. அவருக்கு கிடைக்கும் அனுசரனையும் அன்புத் தோழமையும் அவர்களை நல்லவராக்கி விடும். நம்பிக்கை கொள்ளுங்கள். அவர்களை பேச விடுங்கள். அன்பான மொழிகள் பாசமான வார்த்தைகள் எப்பொழுதும் அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்க அவரது உள்ளமும் பண்பட்டுவிடும். அதுவே அவர்களை நல்லவர்களாக்க நல்ல மருந்து.
அன்பான மொழிதான் யதார்த்தமான மன நோய்க்கு மாமருந்து. அவரை கெட்டவராக நாம் கருதப்படுபவரும் உளநோய்க்கு உள்ளாக்கப் பட்டவர்தான். அவரை அந்நிலைக்கு காலமெல்லாம் இருந்து விட நாம் ஒரு காரணகர்த்தாவாக ஆக வேண்டாம்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் கெட்டவர் என ஒதுக்கவில்லை. அவர்கள் செய்த சேவையே கெட்டவர்களை நல்லவர்களாக்கியதுதான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையால் குடிப்பவர் குடியை விட்டார். பெண் குழ்ந்தை பிறந்தால் அதனை அப்பொழுதே கொன்றவர் அந்த கொடிய பழக்கத்திலிருந்து மீண்டார். இவைகளெல்லாம் மருந்து கொடுத்து மாற்றிய நிகழ்வு அல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளின் விளைவுதான்.
நாம் என்ன நபியா? என்ற கேள்வி வேண்டாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பேணுதலாக கையாளுங்கள். நல்ல வார்த்தைகளை திரும்ப திரும்ப வாய்விட்டு சொல்லச் சொல்லுங்கள். இதற்கு பெயர் தியானம் அல்லது 'திக்ரு' என்பர் முஸ்லிம்கள். நல்லவையே நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை கொடுப்பவருக்கும் அதனை ஏற்றுக் கொள்பவருக்கும் வர வேண்டும் .இறைவன் அதற்கு கிடைக்க பிரார்த்திப்போம்.
''உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார்'' என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 11).
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (4011).
முற்றும் அறிந்தவம் நம்மை படைத்த இறைவன் அறிவான்.
மிக்க பயனுள்ள உரை
ReplyDeleteஇவ்வாறான மனித வாழ்வியல் நெறியினை செவ்வனே செதுக்கின்ற கட்டுரைகளை தினமும் முதல் பக்கமாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்
நன்மையாக அமையும்