நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா..?
-வி.எஸ்; முஹம்மது அமீன்-
"இரவு பகல் மாறி மாறி வருவதில் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன" (அல்குர்ஆன்)
பகல் எல்லாம் தேடித்தேடி இரவை அடைந்தேன். அந்த இரவைப் படிக்கத் தொடங்கும்போது வெளிச்சம் வந்து விட்டது. வெளிச்சத்தில்தான் எதையும் பார்க்க முடியும். படிக்க முடியும். ஆனால், வெளிச்சத்தைத் தொலைத்தால்தானே இரவைப் படிக்க முடியும்! நாமோ இரவு வந்தாலே கண்களை மூடி விடுகிறோம். உலகமே நித்திரையில் ஆழ்ந்து விடுகிறது. எத்தனையோ ரகசியங்களை அடிமடியில் முடிந்து வைத்துக் கொண்டு இரவு விழித்துக் கொண்டிருக்கிறது.
இரவு கண்மூடிக் கொள்ளும்போது பகல் வந்து விடுகிறது. இரவின் ரகசிய முடிச்சுகளைப் பகல் அவிழ்த்துக்கொண்டே போகிறது. அது கலைத்துப் போட்ட ரகசியங்களில் வாழ்வின் சுவாரசியங்கள் கசிந்து கொண்டிருக்கிறது. இரவு ஆடையணிந்து கொண்டிருக்கிறது. பகலோ எப்போதுமே நிர்வாணமாய் இருக்கிறது. துளித் துளியாக இரவு சேமித்து வைத்த அமைதியைப் பகலில் போட்டு உடைக்கிறோம். இரவின் குளுமை பகலெங்கும் உடைந்து வெப்பமாய் ஓடுகிறது. இருட்டுக்குள் பதுங்கிக் கிடந்த வெளிச்சம் பட்டென பரவி விடுகிறது பகலில்!
ஏன் இவர்கள் இரவில் உறங்கிக் கிடக்கின்றார்களா? என்ற வினாவைச் சுமந்து வந்தவனிடம் எல்லோரும் கேட்பார்கள். "நீ ஏன் இன்னும் உறங்காமல் இருக்கின்றாய்?" என்று! நிழலின் அருமை வெயிலில் தெரும் என்பார்கள். இரவின் அருமை நமக்கு எப்போதும் தெரிவதில்லை ஏன்?
"இரவு பகல் மாறி மாறி வருவதில் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன" (அல்குர்ஆன்) அதைக்குறித்த யோசனை யாருக்குமில்லை.
பகல் பரந்து பரவிக் கிடக்கும் நமது உலகம் இரவு ஒரு போர்வைக்குள் சுருங்கி விடுகின்றது. இரவுகளற்ற வாழ்க்கை யாருக்காவது இங்கு சாத்தியப்பட்டிருக்கின்றதா? ஆனால் இரவென்றாலே ஒரு பயம்தான் நமக்கு! (போதாதென்று நாய்கள் வேறு குரைத்து பயத்தை கூட்டுகின்றன. இரவுகள் நம்மிலிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கின்றது.
தன் அடியார்களின் கோரிக்கைகளை, பிழை பொறுக்கக் கேட்டலை மன்னிக்க அடிவானத்திற்கு இறைவனே வந்து கேட்கின்றானே! இரவில் கண்ணீர் பொங்கிச் சிரம் தாழ்த்திய நாட்கள் எத்தனை?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த மாட்சிமை மிக்க "லைலத்துல் கத்ரு" இரவு. நட்சந்திரங்களை மருதாணியால் உள்ளங்கையில் சிவக்க வைத்துக் காத்திருக்கும் பெருநாள் இரவு. இன்னும்... இன்னும்... சொல்லித் தீராத பெரும் வேதனைகளுடன் மருத்துவமனைகள் தோறும் முனங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் இரவு.
இரவு விடிய மறுதலித்து, நீண்டு விட்டால் என்னவாகும்?
"நபியே! இவர்களிடம் நீர் கேளும்! நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் உங்கள் மீது இரவை மறுமை நாள் வரை நிரந்தரமானதாக்கி விட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா?" என்று இறைவன் வினா தொடுக்கின்றான். இரவு நிரந்தரமானால் என்னவாகும்? இன்றும் வரும் இரவு. விடை தேடிப் பாருங்களேன்.!
Post a Comment