Header Ads



வழிகாட்டிக்கு, வழி கிடைக்கவில்லை


-ப. பீர் இலாஹி-    

வாழ்வின் எல்லா நிலைகளிலும் வாய்மையும், தூய்மையும் வேண்டும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இத்தகைய மகத்தான செல்வம் எல்லா மாந்தருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

நேரான வழியில் ஒருவன் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்விடமே இருக்கிறது. அந்த உயர்ந்தோன் நாட்டமில்லாமல் எதுவும் இயலாது. இதையே ஒரு இலை கூட தன் அனுமதியின்றி உதிர்வதில்லை என்று அல்லாஹ் தன் வல்லமையை மிகச்சுருக்கமாகச் சொல்கிறான். இன்னும் உயர்ந்தோன் அல்லாஹ்,

“(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும் தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான் (9:113) என்றும்,

“அத்தகைய மனிதர்களை நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் நயீம் என்னும் சொர்க்கங்களில் அவனுடைய ரப்பு செலுத்துவான் ” (அல்குர்ஆன் 10:9) என்றும் சொல்கின்றான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவராக இருந்தபோது மக்காவுக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கிற்குப் போனார்கள். திரும்பி வர இயலவில்லை. எங்கு தேடியும் அவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியாக பாட்டனார் அப்துல் முத்தலிபு ஹரம் ஷரீபுக்கு வந்து ஏழு முறை தவாபு செய்துவிட்டு, கஃபாவின் திரைச் சீலையைப் பிடித்துக்கொண்டு,

“யா அல்லாஹ்! என் மகனை இழந்தேன்; அவன் நினைவுக்கு அடையாளமாக இருக்கும் முஹம்மதை இழந்துவிடும்படி செய்து விடாதே!” என்று கண்ணீர் விட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கஃபாவின் வாசலிலிருந்து ‘தாதா’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அங்கு தங்கள் செல்வம் குழந்தை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

பின்னால், அபூஜஹ்ல் நின்று கொண்டிருந்தான். “நான் இன்ன பள்ளத்தாக்கு வழியாகப் போய்க் கொண்டிருந்தேன். இந்தக் குழந்தை வழி தெரியாது நின்று கொண்டிருந்தது. பனூஹாசீம் குடும்பத்தைச் சார்ந்த குழந்தையைப் போலிருக்கிறதே என்று எண்ணி, அருகில் போய் விசாரித்தேன். என் யூகம் சரியாக இருந்தது. கூட்டிக் கொண்டு வந்தேன்.” என்று அபூஜஹ்ல் சொன்னான். “இன்னும் உம்மை நேர்வழி காட்டினான்” (93:7) என்ற அல்குர்ஆன் ஆயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி தவறியமை என்று அல்லாஹ் குறிப்பிடுவது இதைத்தான் என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: குர்துபீ)

வழிகாட்டி அபூஜஹ்ல், வழி தவறியவனாகவே வரலாற்றுப் பாதையெங்கும் காணப்படுவது பெரும் நஷ்டம் தான்.

-முஸ்லிம் முரசு, டிசம்பர் 2014

No comments

Powered by Blogger.