ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு தூக்கு - பாகிஸ்தான், பங்களாதேஷ் கருத்துமோதல்
மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று பாகிஸ்தானின் கருத்துக்கு வங்காளதேச அரசு பதிலடி கொடுத்துள்ளது.
வங்காளதேசத்தில் 1971-ம் ஆண்டு சுதந்திர போர் தொடர்பான போர்குற்ற வழக்கில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்றிரவு தூக்கிலிடப்பட்டார்.
போர்குற்ற வழக்கில் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு ‘குறைபாடுடைய விசாரணை’ தான் காரணம் என்று கண்டனம் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்த செய்திக்குறிப்பில், விசாரணை தொடங்கியதில் இருந்து சர்வதேச அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச சட்டமுகமைகள் வங்காளதேச கோர்ட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று பாகிஸ்தானின் கருத்துக்கு வங்காளதேச அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இருநாட்டு உறவுகளுக்கான வங்காளதேசத்தின் கூடுதல் வெளிறவுச் செயலாளர் குவம்ருல் அசன் பாகிஸ்தான் தூதர் சமினா மெக்டபை நேரில் அழைத்து இந்த கருத்தினை தெரிவித்தார்.
அப்போது, “தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மிர் காசிமுக்கு வாய்ப்புகள் இருக்கவே செய்தது. ஆனால் அவர் தவிர்த்துவிட்டார். 1971-ம் ஆண்டு சுதந்திர போரின் போது நடைபெற்ற படுகொலைகளில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தகுதியானர் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது” என்று அசன் திட்டவட்டமாக கூறினார்.
Post a Comment