அலெப்போவில் ரஷ்யா ‘காட்டுமிராண்டித்தனம்’ - அமெரிக்கா கடும் தாக்கு
சிரியாவின் அலெப்போ நகரில் ரஷ்யாவின் நடவடிக்கை ‘காட்டுமிராண்டித்தனமானது’ என்று அமெரிக்காவின் ஐ.நா தூதுவர் சமன்தா பொவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் உக்கிர தாக்குதல்கள் தொடர்பிலான ஐ.நா பாதுகாப்புச் சபை அவசர கூட்டம் ஞாயிறன்று இடம்பெற்றபோதே அமெரிக்கா கடும் கோபத்தை வெளியிட்டது. சிரியாவில் தனது செயல் குறித்து ரஷ்யா பாதுகாப்புச் சபையில் அப்பட்டமாக பொய் கூறுவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டது.
“மத்திய கிழக்கின் போற்றுதலுக்குரிய சின்னமாக இருந்த நகரை ரஷ்ய மற்றும் சிரிய அரசுகள் பாழ்படுத்திவிட்டன” என்று பொவர் சாடினார்.
எனினும் இதற்கு பதிலளித்த ரஷ்யா, அலெப்போ நகரில் இருந்து தீவிரவாதிகளை அகற்ற சிரிய படையினர் முயன்று வருவதாகவும் அதன்போது குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அலெப்போ மீதான தாக்குதல்களில் ரஷ்ய படைகள் பங்கேற்றிருப்பது குறித்து ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கின் எந்த தகவலையும் அளிக்கவில்லை.
எவ்வாறாயினும், “சிரியாவில் அமைதியை கொண்டுவருவது பெரும்பாலும் சாத்தியமில்லாதது” என்று குறிப்பிட்டிருக்கும் சுர்கின், ஆயுதக் குழுக்கள் யுத்த நிறுத்தத்தை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டினார்.
ஐந்தரை ஆண்டு சிரிய உள்நாட்டு யுத்தத்தில் வடக்கு நகரான அலெப்போ தீர்க்கமாக யுத்தகளமாக மாறியுள்ளது. இங்கு நடக்கும் தாக்குதல்களில் பாரிய உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றன. நகரில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பாதியளவானவர்கள் சிறுவர்கள் என்று அங்கு செயற்படும் மனிதாபிமான பணியாளர்கள் கூறியதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்று சனிக்கிழமை அளித்த தகவலில், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட 43 வீதமானர்கள் சிறுவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று கடந்த 48 மணி நேரத்தில் தாக்குதல் இடங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 50 வீதத்திற்கு அதிகமானவர்கள் சிறுவர்கள் என்று சிரிய அம்புலன்ஸ் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘புதிய உச்சத்தை எட்டிய பயங்கரம்’
பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய பொவர், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவளிக்கும் ரஷ்யாவுக்கு “இந்த துன்பங்களை முடிவுக்கு கொண்டுவரும் வல்லமை இருக்கிறது” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது, “சமாதானத்திற்கு பதிலாக ரஷ்யாவும் அஸாத் அரசும் யுத்தத்தையே தேர்வுசெய்கின்றன. சிரிய மக்களுக்கு உயிரை பாதுகாக்கும் உதவிகளை வழங்குவதற்கு பதில் ரஷ்யாவும் அஸாத் அரசும் மருத்துவமனைகளுக்கு குண்டுகளை போடுகின்றன” என்றார்.
ரஷ்யா அமைதி தீர்வுக்கு ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கெ லவ்ரோவ் ஐ.நாவில் உறுதி அளிக்கும் அதே நேரத்தில் கிழக்கு அலெப்போவில் வான் தாக்குதல் நடத்துகிறது என்றும் பொவர் குற்றம்சுமத்தினார்.
இதன்போது இந்த தாக்குதல்களை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும்படி பொவர் பாதுகாப்புச் சபையை வலியுறுத்தினார். எனினும் அலெப்போவுக்கு அருகில் கடந்த வாரம் உதவி வாகனத் தொடரணி மீது வான் தாக்குதல்கள் நடத்தியது தொடர்பில் ரஷ்யா போர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக பாதுகாப்புச் சபையின் பல அங்கத்துவ நாடுகளும் குற்றம்சாட்டின.
அலெப்போவில் ரஷ்யா தீமூட்டும் ஆயுதங்களை பயன்டுத்துவதாக மிஸ்டுரா குற்றம்சாட்டியுள்ளார். தீப்பந்தங்களை ஏற்படுத்தும் இந்த ஆயுதங்கள் இரவிலும் பகல் வேளை போன்று ஒளியை உருவாக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ரஷ்ய மற்றும் சிரிய அரச படை பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளையும் பயன்படுத்துவதாக மிஸ்டுரா குற்றம்சாட்டினார். நிலத்துக்கடியிலான இலக்குகளை தாக்கவல்ல இந்த குண்டுகள் குடியிருப்பு பகுதிகளில் போடப்படுகின்றன.
“திட்டமிட்ட வகையில் இவ்வாறான ஆயுதங்களை சிவிலியன் பகுதிகள் மீது போடுவது போர் குற்றமாக இருக்கும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
It is like fireman pouring petrol on to fire in Sriya. may Allah protect the people from this conflict.
ReplyDelete