ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கிறதா..?
ஐ. நா செயலாளர் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளை தனியாக சந்தித்து பேசுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஏற்பாடு செய்யாதது ஒரு கவலைக்குரிய விடயம் எனவும் இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கிறதா என்ற சந்தேகமும் இருப்பதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி இன்று (04) தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஐ நா செயலாளரை சந்திக்க முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்படாமை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்ட கருத்தை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் ஆயுதம் தாங்கி போராடாமலேயே பாரிய உயிர், உடமை இழப்புக்களுக்கு முகம் கொடுத்த ஒரேயொரு இனம் முஸ்லிம்களாகும். அவர்கள் தனியாக பிரித்துப்பார்த்து கொல்லப்பட்டதோடு வடக்கிலிருந்து அனைத்தும் உறிஞ்சப்பட்டதன் பின் வெளியேற்றப்பட்டார்கள் என்பதன் மூலம் முஸ்லிம்கள் தனியான இனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அப்படியிருந்தும் முஸ்லிம் அரசியல் கட்சித்தலைவர்களின் தனித்தரப்பொன்றை பாங்கி மூனுடன் தனியாக சந்திக்க வைக்க இந்த அரசுக்கு முடியாமல் போனதன் மூலம் ஐ.தே.க தலைமையிலான அரசு முஸ்லிம் சமூகத்தின் முதுகில் குத்துவதாக உலமாக் கட்சி கருதுகின்றது. இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஐ.தே.க கூட்டமைப்பின் மூலம் வைத்துள்ள ஆட்சியின் படி முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து செல்கின்றதா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றோம்.
பாங்கிமூனை முஸ்லிம் கட்சிகளின் தனித்தரப்பு சந்தித்தால் வட மாகாண முஸ்லிம்களுக்கு த.தே கூட்டமைப்பினர் செய்யும் துரோகங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதாலும் அரசியல் தீர்வில் முஸ்லிம்களும் பங்காளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்ற அச்சத்தின் காரணமாக அரசாங்கம் முஸ்லிம் தரப்பை ஓரம் கட்டியுள்ளதாகவே நாம் பார்க்கிறோம்.
இத்தனைக்கும் இந்த நாட்டு முஸ்லிம்களில் 98 வீதமானோர் நல்லாட்சிக்கு வாக்களித்தும் இந்த நிலைமை ஏற்பட்டமை வெட்கக்கேடானதாகும். இவ்வாறு முஸ்லிம் தரப்பு ஓரம் கட்டப்பட்டமைக்கு இலங்கையில் உள்ள ஐ நா காரியாலயத்தின் மீது பழி போட்டு அரசு தப்பிக்க முடியாது. ஏனென்றால் அரசாங்கம் இதனை கோரியிருந்தால் நிச்சயம் நேரம் வழங்கப்பட்டிருக்கும்.
எனவே உடனடியாக இது விடயத்தில் பிரதமர் தலையிட்டு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசியலில் செயற்படும் முஸ்லிம் கட்சிகளைச்சேர்ந்த 'அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பை' ஐ நா செயலாளரை தனியாக சந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் வடக்கு கிழக்கை இணைக்காத அரசியல் தீர்வு குறித்தும் அவரிடம் கூறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உலமாகட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொள்கிறது என்றார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் அமைச்சஉள்நாட்டு தலைவரான மஹிந்தயை சந்திக்க முடியாது தத்தழித்தார்கள் அப்போது வாய் திறக்காத இந்த சிவப்பு தொப்பி இப்போது சிழாப்பு சால்வைக்கு வக்காலத்து வாங்குவதற்காக வாயை திறந்து திரிகின்றது.நேரம் கொடுத்தோ இல்லையோ பிரதான இரண்டு அமைச்சர்கள் சந்தித்து பேசிவிட்டார்கள் என்பதை சிகப்பு மறந்திட வேண்டாம் ,இவ்வாறு சிகப்பு சால்வை ஆட்சியில் நேரம் ஒதுக்கப்படாமல் சந்திக்க முடியுமா?இவர்களை சந்திப்பதால் எஎதுவுமே நடக்கப்போவதில்லை எத்தனை முயற்சி எடுத்தாவது உள்நாட்டு அரசிடம் சமாதானமாக பேசித்தான் நமது காரியங்களை முடிக்க வேண்டும்.பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் மண்டத்துக்கே போகாமல் இருந்து கொண்டு கதை அளந்து எப்பலனும் இல்லை,
ReplyDelete