Header Ads



பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, அராபியப் பெண் விண்ணப்பம்

குரோமசோம்களின் குளறுபடியால் ஆண் உடலில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை பெண்பிறவிகளாகவும், பெண்ணின் உடலமைப்பில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை ஆண்பிறவிகளாகவும் கருதிக் கொள்வதுண்டு. இத்தகைய பாலினத்தவர் தாங்கள் விரும்பும் வகையில் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன.

அவ்வகையில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் இத்தகைய பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இந்தமாதம் சட்டபூர்வமாக்கி அறிவித்துள்ளன. இதற்கென ஒரு மருத்துவ ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அராபிய அமீரக வரலாற்றில் முதன்முறையாக இங்குள்ள 29 வயதுப்பெண், தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அந்த பெண்ணின் சார்பில் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மூன்று வயதில் இருந்தே தான் ஆண் என்பதை அந்தப்பெண் திடமாக நம்பி வந்ததாகவும், அந்த மனநிலைக்கு ஏற்ப கடந்த சில ஆண்டுகளாக உளவியல் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஒரு பெண்ணின் உடலமைப்பில் வாழும் தனது கட்சிக்காரர் இதனால் மிகுந்த வேதனைக்கும், மன அழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தற்போது ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனுமீது வரும் 29-ம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் மருத்துவ குழுவின் பரிசீலனைக்கு நீதிபதி உத்தரவிட்டு, பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளித்தால், ஐக்கிய அராபிய அமீரக வரலாற்றில் முதன்முறையாக ஒருபெண்ணுக்கு நடைபெறும் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை இதுவாகதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.