அரசாங்க மருத்துவர்களின் பிடிவாதம் - பல தரப்புகளும் கண்டனம்..!
தங்களது பிள்ளைகளுக்கு தகுந்த பாடசாலைகளை வழங்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருவதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் டாக்டர். நலிந்த ஹேரத் அரசு மருத்துவ அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு தகுந்த பாடசாலைகளை வழங்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருகின்ற காரணத்தினால் தங்களின் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
தகுதி வாய்ந்த அரச மருத்துவர்களை நாட்டில் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டுமானால், அவர்களுக்கு தகுந்த சலுகளைகளை பெற்றுகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்கம் தனது சங்கத்தை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய டாக்டர் . நலிந்த ஹேரத், இதன் முலம் தங்களது போராட்டத்தை முடக்க முடியாதென்று எச்சரித்தார்.
தங்களது பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக் கொடுக்குமாறு கோரி அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் மருத்துவர்கள் சிலர் கடந்த 14-ஆம் தேதி இரவு கல்வி அமைச்சக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் நீதிமன்றம் விடுத்த உத்தரவொன்றுக்கு ஏற்ப அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் ஹெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்குள் அத்து மீறி பிரவேசித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவர்கள் எடுத்த முடிவை கண்டிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் காரியவசம் மருத்துவர்களுக்கு இவ்வாறு சட்டத்தை மீற அனுமதி இருக்கின்றதா என்று கேள்வியொன்றை எழுப்பினார்.
இடமாற்றம் பெரும் மருத்துவர்கள் கடமைகளை எளிதில் மேற்கொள்ள அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஆனால், இடமாற்றம் பெறாத வைத்தியர்களும் தங்களின் பிள்ளைகளை கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் அனுமதித்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கொழும்பிற்கு வெளி மாவட்டங்களில் பணியாற்றும் வைத்தியர்களும் தங்களது பிள்ளைகளை கொழும்பில் பிரபல பாடசாலைகளில் அனுமதித்து தருமாறு கோரி வருகின்றனர்.
இது அநீதியான வேண்டுகோள் என்று தெரிவித்த அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம், இதன் காரணமாக சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளுக்கு செல்லும் அவகாசம் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதே வேளையில், தங்களது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளை பெற்றுக்கொடுக்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கம் விடுத்து வரும் வேண்டுகோளை கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது சாதாரண மக்களின் உரிமைகளை பறிக்கும் ஒரு செயலென்று அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனிடையே, அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளை வழங்குவதன் முலம் சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு அநீதி ஏற்படுவதாக தெரிவித்து இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி பாதுகாப்பு சங்கம் எனும் அமைப்பால் இந்த புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment