Header Ads



ஏறாவூர் இரட்டைக்கொலை - மேலும் இருவர் கைது, ஒருதொகை தங்கநகைகளும் மீட்பு

-Tm-

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில்; மறைந்திருந்த ஒருவரை திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில்; திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச்சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து அன்றையதினம் இரவு  ஒருதொகை நகையைக் மீட்டதாகவும் அவை கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்டவை எனவும் பொலிஸார் கூறினர். 

இவ்வாறிருக்க, மற்றுமொருவரை ஏறாவூர் நகர மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்ததுடன், இச்சந்தேக நபர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரி என்று  விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணினது  கணவரின் சகோதரனைக் கைதுசெய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   இவருக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் திங்கட்கிழமை (19) ஆஜர்படுத்தியபோது, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இச்சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன. 

No comments

Powered by Blogger.