இலங்கையில் மழையை காணோம் - மின்சாரம் தடைபடாதென சொல்கிறார்கள்
அடுத்த மாதம் 10ம் திகதிக்கு பின்னரே இடைக்கால பருவப்பெயர்ச்சி மழைக்காலநிலை ஆரம்பமாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த பருவப்பெயர்ச்சி கால மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடம்பெறும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்திற்கு பின்னர் இலங்கையில் போதுமான மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை.
ஹம்பாந்தோட்டை மொனறாகலை பொலநறுவை அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்பொழுது வறட்சியுடன் கூடிய காலநிலை நிலவிவருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
2
நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது. நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கைக்கும் மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்படுவது திட்டமிட்ட மின் தடை அல்ல எனவும் அவை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுவாக இந்த மாதங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என்ற போதிலும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும் என இலங்கை மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி கூறியுள்ளார். இதனால் மின்சாரத் தடைபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் வரட்சி நீடித்தால் மின்சார விநியோகம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment