"மையவாடி விவகாரம்" - நீதியை நிலைநாட்ட, முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் கோரிக்கை
-விடிவெள்ளி ARA.Fareel-
மாளிகாவத்தை மையவாடிக்காணி தனியார் ஒருவரினால் கடந்த காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகவும் கட்டடத்துக்கு சொந்தமானவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நண்பர் என்பதால் நீதி நிலைநாட்டப்படவில்லையெனவும் நல்லாட்சியில் நீதி நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் முஸ்லிம் சமய விவகார தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், மகாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மையவாடி காணியை அபகரித்து சட்டவிரோதமாக கட்டடமொன்றினை நிர்மாணித்து விரும் உபாலி ஜயசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து தடுக்க முயற்சித்தபோதும் அது முடியாமற் போனது. அவர் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் நண்பராக இருந்தமையே இதற்குக் காரணமாகும்.
வழங்கப்பட்டிருந்த கட்டட நிர்மாண அனுமதிப்பத்திரம் 2013 ஆம் ஆண்டு காலாவதியாகி இருந்தாலும் அது புதுப்பிக்கப்படவில்லை. கட்டட நிர்மாண அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாது தொடர்ந்து 2014 ஆம் ஆண்டும் நிர்மாண வேலைகள் நடைபெற்றன.
இதற்கு எதிராக நாம் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் மாநகர சபை அதிகாரிகள், மாளிகாவத்தை சுற்றாடல் பொலிஸ் பிரிவு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இதற்குக் காரணம் நகர அபிவிருத்தி அதிகார சபை என நாம் கருதுகிறோம்.
2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுள்ளது. உங்கள் ஆட்சியில் நீதி நிலை நாட்டப்படுமென நாம் கருதுகிறோம்.
நாம் 2016 ஏப்ரல் மாதம் கொழும்பு மாநகர சபை மேயரிடன் இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
இதனையடுத்து மேயர் சட்ட விரோத கட்டட நிர்மாணத்திற்கு எதிராக வழக்கு தொடருமாறு மாநகர சபையின் சட்டப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு மாநகர சபை கட்டட நிர்மாணப் பணிக்கான அனுமதியை நிறுத்தியுள்ள நிலையில் தொடர்ந்தும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதை நிறுத்தும் படியும் கட்டடத்தை உடைக்க உத்தரவிடுமாறும் கோரி இவ்வழக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் 28 ஏ(3) ஆம் பிரிவின் கீழ் தொடரப்பட்டது.
வழக்கினை விசாரித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் வரை குறிப்பிட்ட கட்டடத்தின் எந்தவித நிர்மாணப் பணிகளையும் முன்னெடுக்கக் கூடாதெனவும் வேறு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாதெனவும் உத்தரவிட்டது.
கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி இருதரப்பும் தமது எழுத்துமூல நியாயங்களை முன்வைத்தன.
தீர்ப்பு வழங்கும் திகதி ஜூலை 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும் வழக்கினை தாக்கல் செய்திருந்த கொழும்பு மாநகர சபை வழக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கொழும்பு மாநகர சபையின் இச் செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். நாம் மீண்டும் பழைய ஆட்சியாளர்களின் காலத்தை நோக்கிச் செல்கிறோமா என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்நிலையில் எமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். எமது பள்ளிவாசல் மையவாடி காணியை மீள பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் உங்களுடன் இது தொடர்பில் நாம் கலந்துரையாட விரும்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை 2009 ஆம் ஆண்டு உபாலி ஜயசிங்கவுக்கு 8 மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்ட விஷேட ஆணையாளரின் கீழேயே மாநகர சபை நிர்வாகம் இயங்கியது. இந்த அனுமதி சட்டத்துக்கு முரணானதாகும். ஏனென்றால் பிரகடன காணி உறுதியுள்ள ஒரு காணியில் கட்டடம் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது.
Invoke the almighty Allah for justness. Convey this violation to the human rights commission, Muslim diplomats and to Geneva.
ReplyDelete