Header Ads



ஏறாவூரில் அமைதி - பள்ளிவாசல்களின் அறிவிப்பையேற்று மக்கள் கலைந்துசென்றனர் (படங்கள்)


இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் காவல் நிலையத்திற்கு முன்பாக சனிக்கிழமை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடியதையடுத்து அங்கு சில மணி நேரங்கள் பதற்ற நிலை காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்தே உள்ளுர் மக்கள் அங்கு கூடியதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்திற்கு முன்பாக கூடிய மக்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு போலிசார் கேட்டுக் கொண்ட போதிலும் அவர்கள் முற்பகல் 11 மணி தொடங்கி இரவு 7 மணி வரை காணப்பட்டனர். இதனையடுத்து அங்கு கலவர தடுப்பு போலிசார் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வருவதற்கு முன்னரே பள்ளிவாசல்கள் சம்மேளனம் உட்பட பிரதேச சிவில் கேட்டுக்கொணடதன் பேரில் மக்கள் கலைந்து சென்றுவிட்டதாக பிபிசி தமிழோசையுடன் பேசிய பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உப தலைவரான எம்.எல் அப்துல் லத்தீப் கூறுகின்றார்.

காவல் நிலையத்திற்குள் நுழைய தடை விதிப்பு

கொலையாளிகள் மீதான ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலரும் அங்கு கூடியதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 56 வயதான நூர்முஹம்மது ஹுஸைரா மற்றும் அவரது 32 வயதான மகள் முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு ஆகியோர் வீட்டில் உறக்கத்திலிருந்த வேளை தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த இரட்டைக் கொலை தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரி ஏற்கெனவே உள்ளூர் மக்கள் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

அந்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலிசாரால் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் கைதானதையடுத்து கொலையுடன் தொடர்புடைய சில தடயங்களும் கிடைத்துள்ளதாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த சந்தேக நபர்களில் ஒருவர் 32 வயதான பெண்ணின் கணவனின் சகோதரர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் 4 பேரும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் போலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.