மஹிந்த குடும்பத்துக்கு எதிராக, நடவடிக்கை இல்லை - அஸாத் சாலி சீற்றம்
14.09.2016 அன்று செய்தியாளர் மாநாட்டில் அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்,
மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு சென்றதன்மூல் அவர் கட்சியை காட்டிக்கோடுத்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்திருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ்தான் முதலாவதாக 2006ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டார். அப்போது கட்சியை காட்டிக்கொடுப்பதாக இவருக்கு தோன்ற வில்லையா?
இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி செய்வதால் நாட்டுக்குதான் நன்மை கிடைக்கின்றது. இதன் மூலம் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதில்லை. கடந்த காலங்களில் ஆட்சி வரும் கட்சி அடுத்த கட்சிக்காரர்களை அரசியல் பழிவாங்கும் செயல் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. ஆனால் இம்முறை அவ்வாறான பழிவாங்கல்கள் இடம்பெறவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும.ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் சம்மேளனத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளதால் அரசாங்கத்துக்கு விரோதமாக செயற்படும் மஹிந்த அணியினர் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஓர் அங்கமாக விமல் வீரவன்ச மகாநாயக்க தேரர்களை சந்தித்து இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். ஆனால் மகாநாயக்க தேரர் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பாக அறிந்துள்ளமையால் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்கள் அவரிடம் எடுபடவில்லை.
அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளதாகவும் அரசியலமைப்பு மூலம் ஒருபோதும் நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டோம் என இரண்டுபேறும் உறுதியளித்துள்ளதாக தேரர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியலமைப்பை வைத்து சிங்கள மக்களை குழப்புவதற்கே இவர்கள் மகாநாயக்க தேரரிடம் சென்றுள்ளனர். ஆனால் மகாநாயக்க தேரரின் பதில் மூலம் விமல் வீரவன்ச மூக்குடைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தை குழப்பும் முயற்சிகளை மஹிந்தவுடன் இருக்கும் 40பேர் மாத்திரமே மேற்கொண்டுவருகின்றனர். பாராளுமன்ற வளாகத்துக்குள் விசேட வைத்திய முகாம் அமைத்து இவர்களை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
அத்துடன் 1.3 டிரில்லியன் கடனை அடைப்பதற்கு வரி அதிகரிப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள புதிய வரி குறுகிய காலத்துக்காக என்றே அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் மஹிந்த அரசாங்கத்தில் வரி அதிகரிப்பு 20வீதமாக இருந்தபோது யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இதுதொடர்பாக வாய்திறக்கவும் அச்சப்பட்டனர். ஆனால் தற்போது 11வீதமாக இருந்த வரியை 15வீதமாகவே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறுகிய காலத்துக்கே இது அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தளவுக்கு இன்று ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
கோத்தபாய ராஜபக்ஷ் இன்று அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றார். ஆனால் அவர் அதிகாரத்தில் இருக்கும்போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனி நபர்களுக்கு சொந்தமான காணிகளை பலாத்காரமாக பெற்றுக்கொண்டுள்ளார். சட்டவிரோதமாக யானைக்குட்டி மற்றும் சுறா மீன் ஒன்றை அரசாங்கத்தின் செலவில் வளர்த்து வந்தார். அது தொடர்பாக அரசாங்கம் அவருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததும் மஹிந்த குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை ஒன்றும் இடம்பெறவில்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் மஹிந்த குடும்பத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே அரசாங்கம் மஹிந்த குடும்பத்துடன் வைத்துக்கொண்டுள்ள உறவை முறித்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு வழக்கு தொடர்ந்து அவர்களை சட்டத்துக்கு முன்னால் நிறுத்தவேண்டும். அத்துடன் சிவில் அமைப்புக்களுக்கு நாங்கள் தெரிவித்த மாற்றங்கள் நாட்டில் இன்னும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக மக்கள் எங்களிடம்தான் கேட்கின்றனர். அத்துடன் முதலீட்டுச்சபையின் தலைவரை மாற்றி நாட்டுக்கு கோடிக்கணக்கில் வறுமானத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Post a Comment