ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக்க, டிரம்ப் வாக்குறுதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக அங்கீகரிப்பதாக குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கடந்த ஞாயிறன்று டிரம்ப் டவரில் இருக்கும் தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்த டிரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். நெதன்யாகு ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
“3000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெரூசலம் யூத மக்களின் தலைநகர் என்பதை டிரம்ப் அறிந்தே உள்ளார். நீண்ட காலம் கொண்ட கொங்கிரஸ் ஆணையின்படி, டிரம்பின் கீழான அமெரிக்க நிர்வாகம், ஜெரூசலம் இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகர் என்பதை அங்கீகரிக்கும்” என்று டிரம்ப் பிரசார குழுவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1967 அரபு மற்றும் இஸ்ரேல் யுத்தத்தின் போதே இஸ்ரேல் ஜெரூசலத்தில் பலஸ்தீனர்களின் கிழக்கு பகுதியை ஆக்கிரமித்தது. 1980இல் அதனை தனது ஆட்புலத்திற்குள் இணைத்த இஸ்ரேல், ஜெரூசலம் என்பது இஸ்ரேலின் ஒன்றுபட்ட தலைநகர் என பிரகடனம் செய்தது.
அமெரிக்கா உட்பட பெரும்பாலான ஐ.நா உறுப்பு நாடுகள் ஜெரூசலத்தின் மீதான இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கவில்லை. பலஸ்தீனர்களுடனான அமைதி முயற்சியின் தீர்க்கமான அம்சமாக ஜெரூசலம் இருப்பதாக இந்த நாடுகள் கருதுகின்றன.
எனினும் 1995 ஆம் ஆண்டு அமெரிக்க கொங்கிரஸ் அவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றில், ஜெரூசலம் பிரிக்கப்படாத இஸ்ரேல் தலைநகர் என அங்கீகரித்தது. இதன்மூலம் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்திற்கு மாற்ற நிதி ஒதுக்கவும் அங்கீகாரம் கிடைத்தது.
எவ்வாறாயினும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதிகள் இந்த சட்டத்தை அமுல்படுத்தவில்லை என்பதோடு இந்த சட்டம் ஜனாதிபதிக்கான வெளிநாட்டு கொள்கைகள் மீதான நிறைவேற்று அதிகாரத்தை மீறுவதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
டொனால்ட் டிரம்புடனான ஒரு மணி நேர சந்திப்பு குறித்து நெதன்யாகு அலுவலகமும் உடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதும், அதில் ஜெரூசலம் குறித்து டிரம்பின் வாக்குறி தொடர்பில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
Post a Comment