அலெப்போ மீது ரஷ்யாவும், சிரியாவும் கொலைவெறித் தாக்குதல்
சிரியா நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நகரமான அலெப்போ நகரின் மீது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் சிரியா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த போர் விமானங்கள் பொழிந்துவரும் குண்டுமழைக்கு அப்பாவி பொதுமக்கள் பலர் பலியானதாக தெரியவந்துள்ளது.
சிரியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்துள்ளன.
ராணுவ டாங்கிகள் துணையுடன் காலாட்படையினர் அலெப்போ நகரை நோக்கி முன்னேறி சென்றுகொண்டுள்ள நிலையில் இங்குள்ள பஸ்தான் அல் - கஸ்ர் மாவட்டத்தில் உள்ள போராளிகளின் முகாம்கள் மீது சிரியா விமானப்படைகளும்தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்த அதிரடி தாக்குதலால் இங்குள்ள ஒரு முக்கிய தெருவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற விமான தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 47 பேர் பலியானதாகவும், அங்கு தொடரும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலநூறு பேர் காயம் அடைந்ததாகவும் சிரியாவில் உள்நாட்டுப்போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பீப்பாய் குண்டுகள் மற்றும் கொத்து குண்டுகளையும், ஆபத்தான போர் ஆயுதங்களையும் சிரியா ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகவும் போராளி குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. நேற்றைய குண்டுவீச்சில் அலெப்போ நகரில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்ற நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மற்றொரு நீரேற்ற நிலையத்தை போராளிகள் முடக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் நிலைமை தீவிரம் அடைந்து வருவதால் இதுதொடர்பாக விவாதிக்கவும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், அலெப்போ நகரின்மீது சிரியா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த போர் விமானங்கள் நேற்றிரவு நடத்திய ஆவேச தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் சுமார் 50 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், இதுபோன்ற ஒரு கொடூரமான தாக்குதலை அலெப்போ பகுதி மக்கள் இதுவரை சந்தித்தது இல்லை என்றும் சிரியா ஊடகங்களுக்கு பேட்டியளித்த உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடரும் அரசுப்படைகளின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அலெப்போவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் உடல் சிதைந்த நிலையில் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரம் முழுவதும் ரத்த காயத்துடனும், மரண ஓலத்துடனும் மக்கள் பீதியில் உறைந்துப்போய் இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment