அமெரிக்காவில் மைத்திரி தங்கிய, ஹோட்டலில் குழப்பநிலை - எச்சரிக்கை சமிக்ஞையால் பரபரப்பு
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார்.
நியூயோர்கிலுள்ள லோவர்ஸ் ஈஜன்ஸி ஹோட்டலில் ஜனாதிபதி தங்கியுள்ளார்.
இதன்போது குறித்த ஹோட்டலின் அவசர எச்சரிக்கை சமிக்ஞை திடீரென இயங்கியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டதாக தெரிகின்றது. இந்த சம்பவம் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இந்த அவசர எச்சரிக்கை சமிக்ஞை திடீரென இயங்கியமையினால் முழு ஹோட்டலும் குழப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு பிரிவின் ஒலி வாங்கிகளின் ஊடாக இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை இவ்வாறு அவசர எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
ஹோட்டலின் இரண்டாவது மாடியில் தீப்பற்றும் அறிகுறியுடன் புகை மண்டலம் ஏற்பட்டமையால் இந்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த ஹோட்டலின் பத்தாவது மாடியில் தங்கியிருந்தார்.
எப்படியிருப்பினும் இந்த நிலைமை அரை மணித்தியாலயத்தில் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் நகருக்கு செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அந்நகரில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment