Header Ads



'சம்சங் கேலக்ஸி நோட் 7' - திரும்பப் பெறப்படுமா..?


ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள பிரபல 'சாம்சங்' நிறுவனம் 'கேலக்ஸி நோட் 7' ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற உள்ளதாக தென் கொரிய ஊடகமான 'யான்ஹாப் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.galaxy note

கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி சில நாடுகளில் சாம்சங் நிறுவனம் 'கேலக்ஸி நோட் 7' ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தென் கொரியாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பார்க் சூ-சங் (34) முன்பதிவு செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கினார். தனது பெட்ரூமில் போனை வைத்திருந்த போது திடீரென சில ரசாயன வாசனை பரவுவதை நுகர்ந்தார். பிறகு, சில நொடிகளில் அந்த போன் தீப்பிடித்து எரிய துவங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அவர் வசித்து வரும் பூசன் நகரத்தில் உள்ள சாம்சங் சர்வீஸ் சென்டருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். சர்வீஸ் சென்டரில் இருந்து வந்தவர்கள் பார்க் வாங்கியிருந்த 'கேலக்ஸி நோட் 7' தீப்பிடித்து இருந்ததை உறுதி செய்து எரிந்த போனை சாம்சங் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினர்.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து சாம்சங் நிறுவனம் பார்க்கிற்கு ஸ்மார்ட்போன் வாங்கியதற்கான தொகையையும், 269 டாலர் நஷ்டஈடு தொகையையும் வழங்கியது. ஆனால், அதை வாங்க பார்க் மறுத்துவிட்டார்.

எனினும், இதுகுறித்து விசாரித்த சாம்சங் நிறுவனம் தவறுதலான பேட்டரி அந்த போனில் பொருத்தப்பட்டிருந்ததே தீப்பிடித்ததற்கு காரணம் என்றும், ஒரு சில போன்களில் மட்டுமே இதுபோன்ற குறைபாடுகள் இருந்ததாகவும் விளக்கமளித்துள்ளது. இந்த தகவலை அடுத்து சாம்சங் பங்குகளின் மதிப்பும் சரிவடைந்துள்ளன.

இந்நிலையில், தென் கொரிய செய்தி நிறுவனமான 'யான்ஹாப் நியூஸ்' படங்களுடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, 5 அல்லது 6 பேருக்கு இதே போன்று ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்த செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளன. மேலும், ஒரு வார காலத்திற்குள் கேலக்ஸி நோட் 7-ஐ திரும்ப பெறவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்த செய்தி குறித்து சாம்சங் நிறுவனம் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தென் கொரியாவில் மட்டும் இதுவரை 4 லட்சம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருப்பது நினைவு கூரத்தக்கது.

No comments

Powered by Blogger.