Header Ads



70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை - கண்கலங்க வைத்த சோகம்


'தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து பலர் தவறிவிடுகின்றனர். வசதி படைத்தவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். வறுமையில் வாடுபவர்களுக்கு வீதிகளே வீடுகளாகிறது. சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடக்க முடியாத முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். பசியின் கொடுமையைவிட அவரது மனம் கடும் இறுக்கத்தில் இருந்தது. காரணம், பெற்ற மகனே தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டிய சோகம் அவரது முகத்தில் அப்பி இருந்தது. அவரை பார்த்து அந்த வழியாக சென்ற யாரும் ஆதரவுக்கரம் நீட்டாத நிலையில், அந்த முதியவருக்கு சமூக ஆர்வலர் வெங்கடேசன், கொட்டும் மழையில் அவரை மீட்டு முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

இது மனிதநேயத்தை வெளிக்காட்டினாலும், இன்னொரு பக்கம் முதியவரின் சோகக் கதை அனைவரையும் கண்ணீர் வரவழைக்கிறது. "போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேற்று மாலை எனக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசிய காவலர், 'ஹலோ' வெங்கடேசன் சாரா... தலைமைச் செயலக காலனி, மேடவாக்கம் டேங்க் சாலையில் ஒரு முதியவர் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு குளிரில் நடுங்கி கொண்டு இருக்கிறார். அவரை மீட்டெடுக்க உதவுங்கள்' என்று தகவலைச் என்னிடம் சொன்னவுடன் சம்பவ இடத்துக்கு சென்றேன் என்று ஆரம்பித்தார் அனைத்து உயிரின வாழ்வியல் மையத்தின் (அகல்) நிறுவனர் வெங்கடேசன். அவர் சொன்ன தகவல் குளிர்ச்சியான அந்தநேரத்திலும் நம்மை உஷ்ணமாக்கியது.

"நான் சம்பவ இடத்துக்கு சென்ற போது மழையில் நனைந்தப்படி வேட்டியில்லாமல் நிர்வாணமாக முதியவர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடுங்கியவாறு படுத்திருந்தார். அவரால் எழுந்து நடக்ககூட முடியவில்லை. அவரை அவ்வழியாக சென்றவர்கள் 'அய்யோ பாவம்' என்று சொல்லியபடி கடந்து சென்றனர். அதில், இரக்கப்பட்ட ஒருவர்தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் சொல்லி இருக்கிறார். அந்த முதியவரை அங்கிருந்து சக்கர நாற்காலியில் நான், ராஜா, பரகத் ஆகியோர் சேர்ந்து மீட்டோம். பிறகு தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தோம். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லரிடம் விவரத்தைச் சொன்னவுடன் அவரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததோடு சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாபுவை அனுப்பி வைத்தார். பிறகு, அந்த முதியவரை போரூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தோம். இப்போது அவர் அங்கு நலமாக இருக்கிறார். அவரிடம் விசாரித்த போது முதியவரின் பெயர் ஏகாம்பரம் என்றும், வந்தவாசியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்தால், தன்னுடைய மகன் ஜெயராமன், அயனாவரத்தில் உள்ள மார்க்கெட்டில் வேலைப்பார்ப்பதாகவும், அவன்தான் வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாகவும் சொன்னார். மீண்டும் தன்னுடைய மகன் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். ஏகாம்பரத்தைப் போல பலர் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள். எங்கள் கவனத்துக்கு வருபவர்களை காப்பகத்தில் சேர்த்து வருகிறோம்" என்றார்.

சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வெங்கடேசன், சென்னை தலைமைச் செயலக ஊழியர். பணிக்குப் பிறகு அவர் இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.