Header Ads



பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி, கரை சேர்ந்த 2 இலங்கையர்கள்

கடலில் பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் பொலிசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கேன்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

விசாரணையில், அவர்கள் கார்த்திக் (23), சாந்தகுமார் (42), என தெரியவந்தது. கடந்த 1992ல் இலங்கை, திருகோணமலையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த இவர்கள் சென்னை, முகப்பேரில் வெளிப்பதிவில் தங்கி, விசைப்படகு பழுது நீக்கும் மெக்கானிக் தொழில் செய்வதாக கூறப்படுகின்றது. 

சில நாட்களுக்கு முன், காரங்காடு கடல் பகுதியில் பழுதான பிரிட்டோ என்பவரின் விசைப்படகை சரி செய்த போது தண்ணீர் புகுந்து படகு நீரில் மூழ்கியது. தண்ணீரில் தத்தளித்த இருவரும் பிளாஸ்டிக் கேன்களை பிடித்து நீந்தி கரை சேர்ந்தது தெரிந்தது. ஆனால், அவர்கள் கூறியது நம்பும்படியாக இல்லாததால் படகு உரிமையாளர் பிரிட்டோவிடம் விசாரணை நடக்கிறது. 

கடந்த, 2014 ஆகஸ்ட் மாதம் திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் இருந்து சயனைடு குப்பிகள், இலங்கை நாணயங்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்ற விடுதலை புலி உறுப்பினர் ஒருவரும், சில மாதங்களுக்கு முன் ஹெராயின் போதை பொருளுடன் ஒருவரும் பொலிசில் சிக்கினர். 

தொண்டி, தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இருந்து டீசல், பெட்ரோல், கடல் அட்டை, மருந்து பொருட்கள் இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்படுகின்றன. தற்போது சிக்கிய, இரண்டு பேரும் கடத்தல் பொருட்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்றிருக்கலாம், என பொலிசார் சந்தேகிக்கின்றனர் என தமிழக ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

No comments

Powered by Blogger.