ஜோர்டான் நாடாளுமன்றத் தேர்தல்: முஸ்லிம் சகோதரத்துவ கட்சி 16 இடங்களில் வெற்றி
ஜோர்டான் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி 16 இடங்களில் வெற்றி பெற்றது.
அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலுள்ள 130 இடங்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி வேட்பாளர்கள் 16 பேர் வெற்றி பெற்றனர். கடந்த 2010, 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்தக் கட்சியினர் போட்டியிடவில்லை.
தொழிலதிபர்கள், அரச குடும்பத்துக்கு நெருக்கமான இனக்குழுத் தலைவர்கள் பலர் வெற்றி பெற்றனர். 21 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் கிறிஸ்தவர்கள் 9 பேர் எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். செசனியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, ஜோர்டான் அரசருக்குதான் அங்கு உண்மûயான அதிகாரம் இருந்து வருகிறது. நாடாளுமன்றம் அல்லது அரசின் அனுமதி இல்லாமலேயே, மேலவைக்கு உறுப்பினர்களை நியமிப்பது, பாதுகாப்புப் படைகளுக்கான தலைவர்கள், நீதிபதிகளை நியமிப்பது ஆகியவற்றை அரசர் நேரடியாகச் செய்து வருகிறார்.
மேற்கத்திய நாடுகளின் நெருங்கிய கூட்டாளியான ஜோர்டானில் பொதுவாக ஆழமான இஸ்லாமிய தாக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவத்தைச் சேர்ந்த இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி 16 இடங்களை வென்றுள்ளது.
Post a Comment