புரளி கிளப்பியவருக்கு, 1.33 கோடி ரூபாய் அபராதம்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1.33 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் ஜெனிவா விமான நிலையத்திற்கு கடந்த யூலை 26ம் திகதி ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அப்போது பேசிய பெண் ஒருவர் ஜெனிவா விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் தனது உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு வருவதாக பகீர் தகவல் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தை தற்காலிகமாக மூடிய பொலிசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட பெண்ணிடம் சோதனை செய்தபோது அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பொலிசாருக்கு தவறான தகவல் அளித்த பெண்ணை தேடியபோது அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள Annecy என்ற நகரில் கைது செய்யப்பட்டார்.
41 வயதான அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, ஜெனிவா விமான நிலையத்திற்கு அவரது கணவர் வர இருந்ததாகவும், அவருடன் பயணம் மேற்கொள்ள இருந்த பணிப்பெண்ணை பழிவாங்க இவ்வாறு தவறான தகவல் அளித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிசாருக்கு தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக அப்பெண்ணிற்கு நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில் சிறையில் உள்ள அப்பெண்ணிற்கு 90,000 பிராங்க்(1,33,70,193 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெனிவா விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியபோது அங்கிருந்த 145 பொலிசார் சுமார் 880 மணி நேரம் தொடர்ச்சியாக பணியில் ஈடுப்பட்டதாகவும், அவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment