செப்டம்பர் 11 இல் ஹஜ்ஜுப் பெருநாள் வருமானால், அதனை தவறாக பொருள் கொள்ளக்கூடும் - முஸ்லிம்கள் அச்சம்
இந்த ஆக்கம் நேற்று -01- வியாழக்கிழமைக்கு முன்னர் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
விடிவெள்ளி எம்.ஐ.அப்துல் நஸார்)
விடிவெள்ளி எம்.ஐ.அப்துல் நஸார்)
அமெரிக்க முஸ்லிம்கள் அச்சம்
உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு தயாராகிவரும் நிலையில் அதே தினத்தில் நிகழ்ந்த நேரொத்த நிகழ்வு தொடர்பில் அவர்கள் அச்சமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
சந்திர கணக்கின் பிரகாரம் இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாள் செப்டம்பர் மாதம் 11ஆந் திகதி கொண்டாடப்படவுள்ளது, குறித்த செப்டம்பர் மாதம் 11ஆந் திகதி என்பது, 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் பென்டகன் மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினமாகும். அல்-கைதா அமைப்பினால் 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 3000 பேர் பலியானதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
'தியாகத் திருநாள்' என அழைக்கப்படு ஈதுல் அழ்ஹா என்ற ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை தெரிவித்து, உறவினர் வீடுகளுக்குச் சென்று அன்பளிப்புக்களைப் பரிமாறி ஒருவரையொரு மன்னித்து உறவாடி அதனைக் கொண்டாடுகின்றனர்.
ஹஜ்ஜுப் பெருநாள் செப்டம்பர் 11 இல் வருமானால் சிலர் அதனை தாக்குதலை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியைக் கொண்டாடும் தினமாக தவறாக பொருள் கொள்ளக் கூடும் என அமெரிக்க முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
'பார்த்தீர்களா முஸ்லிம்கள் செப்டம்பர் 11 தாக்குதலைக் கொண்டாடுகின்றனர் எனக் கூறி சிலர் வேண்டுமென்றே மக்களை திசைதிருப்ப முனைவார்கள்'என லோங் ஐலண்ட் இஸ்லாமிய மத்திய நிலையத்தின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஹபீப் அஹமட் நியூயோர்க் டைம்ஸுக்குத் தெரிவித்தார்.
இம் மாதம் குயின்ஸ் பிரதேசத்தில் இமாம் ஒருவரும் அவரது உதவியாளரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அச்சம் நியூயோக்கின் பாதுகாப்பு தொடர்பான கவலையினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
'நாங்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம் என்ற மனநிலையிலேயே எமது சமூகம் உள்ளது' என நியூயோர்க்கிலுள்ள அரப் - அமெரிக்க சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லிண்டா சார்சூர் நியூயோக் டைம்ஸுக்குத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஏனைய தலைவர்களுடன் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால் எவ்வாறு அவற்றை எதிர்கொள்வது, எவ்வாறு தயார் நிலையில் இருப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
'தற்போது அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மனதிலும் இது இருக்க வேண்டும்' என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் தொடர்பான சபையின் அரசாங்க விவகாரப் பணிப்பாளர் ரொபேட் மெக்கோ தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டவுடன் பிறைக்குழுவினால் ஹஜ் பெருநாள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
ஜப்னா முஸ்லிம் செய்திகள் இப்போதெல்லாம், நெறிப்படுத்தப்படாமல் பிரசுரிக்கப்படுவது அதிகமாக இடம் பெறுகிறது. இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் September 12 ந்திகதி தான் என்பது நேற்றே தீர்மான மான ஒரு முடிவு. இந்த ஷணம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம். ஆனாலும் இந்த ஆக்கத்தின் கருப்பொருளே September 11 ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆக்கத்தை எழுதியவர் ஹஜ்ஜுப் பெருநாள் தினம் தீர்மானிப்பதற்கு முன்னர் தான் அனுப்பியிருப்பார் அனால் இதனை பதிவேற்றம் செய்யும் போது செய்தியின் உண்மையை சீர்தூக்கிப் பார்த்தல்லவா பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ReplyDelete