அரசியல் அழுத்தம், இழுபறிக்கு மத்தியில் MR லத்தீப்..!
-விடிவெள்ளி MFM.Fazeer-
பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 11 ஆவது தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி பொலிஸ் ஆணைக் குழு வழங்கிய நியமனக் கடிதத்தை அரசியல் அழுத்தம் காரணமாக கடும் இழுபறிக்கு மத்தியில் நேற்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளார்.
அதன்படியே நேற்று பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத் தளபதியாக அவர் நியமனம் பெற்றார்.
இந் நிலையில் நேற்று கட்டளைத் தளபதிக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸ் விஷேட அதிரடிப்படை தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
இதன்போது அவருக்கு அங்கு விஷேட அணிவகுப்பு மரியாதையொன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து அவர் அதிரடிப்படை வீரர்களை நோக்கி விஷேட உரையொன்றினையும் நிகழ்த்தவுள்ளார்.
முன்னதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபை பொலிஸ் ஆணைக் குழு கடந்த 8 ஆம் திகதி தேர்ந்தெடுத்து 9 ஆம் திகதி அவரின் நியமனக் கடிதத்தை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியது.
எனினும் நேற்றுக் காலை வரை பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக பொலிஸ் மா அதிபரால் அந்த நியமனம் தொடர்பில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான நியமனக் கடிதத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபிடம் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் ஊடகங்களும் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் எழுப்பிய நிலையில், நேற்று பொலிஸ்மா அதிபரை இது தொடர்பில் கேள்வி கேட்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தயாரான நிலையிலேயே அந்த நியமனம் லத்தீபுக்கு வழங்கப்ப்ட்டது.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் 10 ஆவது கட்டளைத் தளபதியாக இருந்த ( ஒப்பந்த அடிப்படையில் ) பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேராவின் ஒப்பந்த காலம் கடந்த 8 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து கட்டளைத் தளபதி பதவியில் வெற்றிடம் எற்பட்டது.
இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி அதிரடிப்படை கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபை நியமிக்க அனுமதியளித்த பொலிஸ் ஆணைக் குழு அதற்கான நியமனக் கடிதத்தை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இக் கடிதமே நேற்றைய தினம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment