Header Ads



முஸ்லிம்களுக்கு பிரச்சினையா..? என்னிடம் முறையிடுங்கள் - புத்திக்க Mp

ஐ.தே.க. எம்.பி. புத்திக்க பத்திரன வழங்கியுள்ள செவ்வி இது

உங்களுக்கு கட்சியினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் என்ன?

முக்கியமாக கட்சி அமைப்பாளர்கள் என்ற வகையில் கிராமிய மட்டத்திலான பணிகளை முன்னெடுக்கிறேன். கட்சியினால் பல பொறுப்புக்கள் ஒப்படைக்கபட்டுள்ளன. அதில் ஒன்று பாராளுமன்ற விவகாரம். பாராளுமன்றத்தில் எனது செயற்பாடுகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் manthri.lk இணையதளத்தில் சென்று பார்க்கலாம். பாராளுமன்றத்தில் செயலூக்கமிக்க உறுப்பினர்களுள் நான் 3வது இடத்தில் உள்ளதாக அவ்விணையதள கணிப்பீடு சொல்கிறது. அதேபோன்று மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் செயற்படுகிறேன். கட்சியினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளுக்கு மேலதிகமாக எனது ‘சமாதி’ மக்கள் அபிவிருத்தி நிதியத்திற் கூடாகவும் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கி வருகிறேன்.

பாராளுமன்றத்தில் சிறந்த உறுப்பினர்களுள் ஒருவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே, புதிதாக அரசியல் களம் நுழைய காத்திருப்பவர்களுக்கு நீங்கள் கூறும் விடயங்கள் என்ன?

பாராளுமன்றம் என்பது களியாட்ட மண்டபமல்ல. அங்கு அரட்டை அடிக்கும் பொழுதோ அல்லது சண்டைச் சச்சரவுகளில் ஈடுபட்டு காலத்தை விரயமாக்கும் பொழுதோ அது மக்களுக்கே பாதிப்பாக அமைகிறது. பொதுமக்களின் வரிப்பணமே அவர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்படுகிறது. எனவே, அமைச்சர்கள் மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட பணிகளிலேயே ஈடுபட வேண்டும். நான் ஒருபோதும் பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை கையாண்டது கிடையாது. சக உறுப்பினர்களோடு சண்டையில் ஈடுபட்டது கிடையாது. எனவே, பாராளுமன்றத்திற் கூடாக மக்களின் பிரச்சினைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதனை முன்வைக்கத் தகுதியுடையவர்களே பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசப்படும் அளவுக்கு தென் மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. கூடுதலான முஸ்லிம் மக்களின் வாக்குகளாலேயே சிலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்யப்படுகிறார்கள். இதற்குரிய காரணம் என்ன?

மாத்தறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைச்சர்கள் தெரிவாவதில்லை. அதுபோன்று சதவீதமாக எடுத்துப்பார்த்தால் மொத்த வாக்கு எண்ணிக்கையில் முஸ்லிம் மக்களின் வாக்கெண்ணிக்கை குறைவு. முஸ்லிம் மக்களை பற்றி பேசுகின்ற அமைச்சர்கள் தெரிவாகாமல் இருப்பது மிகவும் மோசமானதொரு விடயம். மாகாண சபை மற்றும் நகர சபைகளை எடுத்துக் கொண்டாலும் இந்நிலையை கண்டுகொள்ள முடிகிறது. ஆதனால் அவர்கள் இப்பிரதேசம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துவதில்லை. மாத்தறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்கள் எனக்கு வாக்களிக்கிறார்கள். நான் அவர்களுக்கும் சேவையாற்றி வருகிறேன். இங்குள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு நான் உதவிகளை செய்து வருகின்றேன். எதிர்வரும் காலத்தில் இம்மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்களுக்கும் உதவிகளை வழங்க தயாராக இருக்கின்றேன்.

தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற பெரும்பாலான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதில் தென் மாகாண கல்வி அமைச்சு இன ரீதியில் பக்கச் சார்பாக நடந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பில் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது?

மாகாண சபையொன்றின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடும் பொழுது அங்குள்ள அமைச்சுக்கு பெரியளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால் நான் பத்திரிகையின் வாயிலாக கூற விரும்புவது என்னவென்றால் மாத்தறை மாவட்டத்தில் அநீதிக்குள்ளான முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கும் அவ்வாறான பிரச்சினைகள் உள்ளதென்றால் என்னிடம் முறையிடுங்கள். என்னை வந்து சந்தியுங்கள். குறைந்த பட்சம் எனது கையடக்கத் தொலைபேசிக்கு குறுந் தகவல் ஒன்றையாவது அனுப்புங்கள். எனது அலுவலகத்தில் கபில சுரங்க என்பவர் உள்ளார். எனது அலுவலக இலக்கம் 0412230946. இவ்விலக்கத்திற்கூடாக கபில சுரங்கவினை அழைத்து உங்களுடைய பிரச்சினைகளை முன்வைக்கலாம்.

இது போன்ற பிரச்சினைகள் மாத்திரமல்ல. இப்பத்திரிகையை வாசிக்கின்ற எல்லோருக்கும் பல பிரச்சினைகள் இருக்கலாம் உதாரணமாக தொழில் பிரச்சினை, கிராமத்திலுள்ள பிரச்சினைகள் அரசியல் பலிவாங்கல்களால் ஏற்பட்ட அநீதிகள் உள்ளிட்ட சகலதையும் தென்மாகாணத்தில் உள்ள மக்கள் அவற்றை 0777306922 என்னும் எனது இலக்கத்திற்கோ அல்லது எனது இணைப்புச் செயலாளர் கபில சுரங்கவிற்கோ தெரியப்படுத்துங்கள். சில நேரம் எனது கையடக்கத் தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லாமல் இருந்தால் எனது செயலாளருடன் கதையுங்கள். அவரிடம் சொல்லுங்கள் அவ்வாறான பிரச்சினைகளை நான் பாராளுமன்றத்தில் முன்வைத்து தீர்வுகளை பெற்றுத்தருவேன்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எவ்வாறான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இனங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு கலாசார ரீதியில் நாங்கள் வேறுபட்டிருந்தாலும் மொழி ரீதியாக வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் இன மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நாம் ஒரே தேசத்தில் ஒன்றாக கிளர்ந்தெழுந்தால் தான் நாட்டை முன்னேற்ற முடியும். அந்த உணர்வை வளர்க்கும் வகையிலான பணிகளை பாடசாலை மட்டத்திலிருந்து முன்னெடுக்க வேண்டும். இது முதலாவது விடயம்.

இரண்டாவதாக நாட்டு மக்களுக்கு மொழிக் கல்வியை புகட்ட வேண்டும். அதற்கு சிங்களவர்களுக்கு தமிழையும் தமிழ் பேசும் மக்களுக்கு சிங்களத்தையும் போதிக்க வேண்டும். மக்களுக்கு மத்தியிலான சந்தேக போக்குகள் இடம்பெறாமல் பார்க்க வேண்டும். இனவாதச் செயல்கள் தலைதூக்காமல் இருக்க அதை தூண்டும் இடமாக எமது மதங்களை வைத்திருக்க கூடாது.

மலேசியாவை நாம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அங்கு சீன மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என பலர் உள்ளார்கள். அவர்கள் தங்களது அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு அங்கு கலாசார மாற்றங்கள் இருந்தபொழுதும் எல்லா மக்களும் ஒன்றினைந்து நாட்டை கட்டியெழுப்பினார்கள்.

1 comment:

Powered by Blogger.